2
அமரர் நேரு
வரவேற்புக் கூடம் வந்தது. சிவஞானம் உணர்ந்து தவித்த தனிமையின் வேதனையை ‘அழகு மாளிகை’க்குரிய வரவேற்பறையின் ஆழ்ந்த அமைதி மிகவும் நெருக்கமாகக் காட்டியது. பிரிவின் இனம் புரிந்த துயரம், இனம் புரியாத வகையில் அவனது மன உளைச்சலை வளர்த்தது : மேனியில் பட்டுப்படர்ந்தசெயற்கைக் காற்றின் குளுமை அவன் தவிப்பைச் குடாக்கியது. இயற்கையின் சீதளக் காற்று, அவனது உடலைக் கடந்து உள்ளத்தைத் தீண்ட முற்பட்டிருந்தது. அப்போது தான் அவன் தன் நிலைமையை உணரலானான்; தன் முன்னே விரிந்திருக்கும் கடமையை எண்ணலானான்; அழுவதும் சிரிப்பதுமாகப் பொழுதைக் காட்டும் அம்மழலையைத் தலை குனிந்து கீழ்ப்பார்வை வீசிப் பார்த்தான் அவன்.
மாயப் பிரபஞ்சத்தில் வாழ்க்கை ஒரு மாயம் என்று பேசப்பட்டுவருகிறது.
ஆனால், அந்தக் குழந்தையோ, எதைப்பற்றியுமே கவலைப்படாதது போன்று, சலனம் கடந்த நிலையில் அழகுடன் கண் வளர்ந்துகொண்டிருந்தது.
அமரர் நேரு ரோஜாப்பூ மாலை அணிந்திருந்தார் !....
சிவஞானம் அக்காட்சியைக் கண்டு, பக்தியுடன் தலை தாழ்த்தி, மனம் நெகிழ்ந்து, இனம் கண்டு பெருமூச்சுவிட்டான். இடது விலாப்புறத்தில் ஒளிந்துகொண்டிருந்த வலி லேசாகத் தலை தூக்கியதை அவன் உணராமல் இல்லை. பெட்டியும் கையுமாகத் தன்னையே வைத்த விழி எடுக்காமல் உறுத்துப் பார்த்தவாறிருந்த ரிக்ஷாக்காரனை அவன் கவனித்ததும்தான், மாளிகையின் வரவேற்புக்கூடத்தில் நின்றுகொண்டிருப்பது அவனுக்கு விளங்கியது. அவன் வரவேற்பறையின் நிர்வாகியை நோக்கினான். அதே பழைய ஆள்தான். பெர்லின் ஸ்லாக் இல்லாமல் இருக்கமாட்டார் போலும் அந்தப் பெரியவர்?