பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


‘சஸ்பென்ஸ்’

ர் முழுவதற்கும் உறக்கத்திற்கான காலம் நிர்ணயிக்கப்பட்டிருந்த வேளை அது.

ஆனால், ஞானபண்டிதன் மட்டும் உறக்கம் கொள்ளாமல், கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருந்தான். மேஜை விளக்கின் பாதத்தில் இருந்த பொத்தானை அழுத்தி, விளக்கை அணைத்துவிட்டு உறங்க வேண்டுமென்று முயன்றாலும், அவனால் முடியவில்லை.

மணி இரண்டு — இரவில்! ஏதோ ஒரு தாளிலே, தன்னுள் —தன்னுடைய நெஞ்சிலே, ஏதோ ஒரு நெருஞ்சி முள் தைக்கப்பட்டுவிட்டதையும், அது பிடுங்கி எறியப்படாமல் அப்படியே இருந்து வருவதையும், அவ்வேதனை நெஞ்சுக்கு மாளாத் துயரத்தை அளித்து வருவதையும் அவன் அவ்வப்போது அடிக்கடி உணர்ந்து வராமல் இல்லை. ஒய்வு கண்டால், அப்படிப்பட்ட சிந்தனைகள் அவன் அமைதியைப் பறித்துவிடுவது வழக்கம்.

இன்று அவன் மனம் பெரிதும் சலனமடைந்து பாதிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் போக்கிரி செங்கோடனே ஆதாரமான ஒரு பயமாக — சூதாக — விதியாக — அவனுக்குத் தோன்றி வந்தான். ‘செங்கோடன் என்னை மீட் பண்ணுவதாக டம்பம் பேசிச் சென்றானே, ஏன் வரவில்லை ?’ என்று அவன் தனக்குத் தானே ஆலோசனை செய்துகொண்டிருந்தான். அதே நேரத்தில், செங்கோடன் தன்னிடம், “சோமசேகர் உன் சொந்தத் தந்தையா?” என்று கேட்ட கேள்வி, அடிக்கடி அவனையும் அறியாமல் அவனை நச்சரித்ததையும், நையாண்டி செய்ததையும் எச்சரிக்கை செய்ததையும் அவன் சில சமயங்களில் மறந்துவிட முயன்றான்: பல தருணங்களிலே, அவ்வார்த்தைகளை ஒன்றை ஒன்பதாகப் பெருக்கித் தன் மூளையைக் குழப்பிக்