பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

கொண்டு கஷ்டப்பட்டான். அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம் அவன் “நான் தாயற்றவன் ஆனேன். அதே போலத் தந்தையும் அற்ற அனாதையாகிவிடுவேனோ ? அப்படித்தான் ஆகி விட்டிருப்பேனோ ?” என்றெல்லாம்கூட அவன் உள்ளூரச் சிறு குழந்தையாக விம்மினான்.

மண்டை வலித்தது.

விரிந்து கிடந்த புத்தகத்தை எடுத்தான். அப்போது, தான் பார்த்த ‘தி விசிட்’ படம் ஞாபகத்திற்கு வந்தது. தன்னைப் பழி வாங்கிய பழைய காதலனை — காமுகனைப் — பிறகு ஏழையாக இருந்து பெரும் பணக்காரி ஆகிவிட்ட பிறகு அச்சீமாட்டி பழிக்குப் பழிவாங்கி, கடைசியில் அவனை மன்னித்துத் திரும்பும் உச்சக் கட்டத்தை அவன் மனம் ரசித்து, மீண்டும் மீண்டும் அசை போட்டது. அவனையும் அறியாமல் கண்ணீர் சுரந்து வழிந்தது.

அவன் பார்வை ‘விருந்தாளிகளின் விடு’தியை நோக்கிச் சென்றது. பூவழகி ரேழியில் வந்து நிற்பது போலப் பட்டது.

அவளைச் சந்திக்க வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான்.

ஆனாலும், அது ஒரு வேளை பிறர் கண்ணுக்கு ‘அசிங்கிதமாக’ப் படக்கூடுமே என்று கருதிவிட்டான்.

அன்று தன் தந்தையின் கண்ணீரைக் குழலியின் அம்மா துடைத்த காட்சியை அவன் மனம் இப்போது விபரீதமாகவே எடை போட்டது. அவ்வெண்ணம் அவனுக்கு விருப்பம் தராது. உடனே எழுந்து சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

அப்போது :

‘டக்,டக்’ என்று சத்தம் கேட்டது. ஏதோ சத்தம் போலிருக்கிறதென்று மீண்டும் படிக்க ஆரம்பித்தான். மீண்டும் ‘தடபுடா’ என்னும் சத்தமும் பேச்சொலியும் கேட்கத் தொடங்கின.

ஞானபண்டிதனுக்கு அதற்குமேல் இருப்புக் கொள்ளவில்லை. உடனே எழுந்தான்; நாற்புறமும் எட்டிப் பார்த்தான், நடந்தான்.

பெரியவரது படுக்கை அறைக்கு அவன் ஒடினான். விளக்கு எரிந்தது.