பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

ஆ ! என்ன பயங்கரம் !...

அங்கே, மொட்டைத்தலையும் பயங்கரமான மீசையும் கொண்ட முரட்டு எத்தன் செங்கோடன் நின்றான், ஒரு கையில் ‘பிச்சுவா’ இருந்தது. இன்னொன்றில் கைத் துப்பக்கி... அருகில் ஒரு ‘டேப்ரெகார்டர்’ இருந்தது.

“நீர் எனக்கு இப்போது பத்தாயிரம் ரூபாய் தரல்லேன்னா, இப்பவே இந்த மிஷினைப் போட்டுக் காட்டி, உம்மைச் சீரழிச்சு, கம்பி எண்ண செஞ்சுப்பிடுவேன் ! அப்புறம், உம் வீட்டிலே கடக்கப் போகிற ரெண்டு கல்யாணங்களையும் உம்மால் பார்க்கவே முடியாது!... என்ன சொல்கிறீர்? எனக்குக் காசுதான் கடவுள் !... இப்போது, பணம் தந்தாக வேணும்! இல்லேன்னா, இதே வீட்டிலே கூடிய சீக்கிரம் பல கொலை நடக்கும்!... அந்தக் குட்டி பூவழகியையும் எங்கே இருந்தாலும் பழி வாங்காமல் தூங்க மாட்டேனாக்கும் !... ம்... சொல்லும்! இல்லாட்டி, இப்பவே உன் மகன் கிட்ட எல்லா நடப்பையும் சொல்லிப்பிடுவேன் ! அப்புறம் அவன் உம்மை உயிரோடு சாகடிச்சுப்பிடுவானே !...” என்று பயமுறுத்திக்கொண்டிருந்தான், செங்கோடன்.

“போ! போய் ஞானபண்டிதனிடம் சொல். என் முடிவை நான், அறிந்தவன்தான் !...ம்...ஒடு !...நான் இனி உனக்கு அம்மன் காசுகூடத் தரமாட்டேன். எல்லாம் ஞானபண்டிதன் சொத்து !... அதில் எனக்கு ஏது உரிமை !” என்று கலங்கிய — உறுதியான — குரலில் சொன்னார் பெரியவர் சோமசேகர்.

ஞானபண்டிதனுக்கு ரத்தம் உறைந்துவிட்ட மாதிரி இருந்தது. போக்கிரிப் பயல் செங்கோடனை எதிர்த்துப்பாடம் கற்பிக்கத் துடித்தான் அவன். அதற்குள் அவனுக்கு வேறொரு யோசனை தட்டியது. போலீசுக்குப் ‘போன்’ செய்ய வேண்டுமென்பதே விவேகமானதாகப்பட்டது. அதற்குள் — போலீஸ் வருவதற்குள் — செங்கோடனுடன் நயந்துபேசி தங்க வைத்துவிட வேண்டுமென்றும் கருதி, டெலிபோன் செய்யக் கீழ்த்தளத்துக்கு ஓடிவந்தான்.

அங்கே ‘போலீஸ் ஜீப்’ ஒன்று வந்து நின்றது.