பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

“வாங்கோ ஸார், வாங்கோ. என்ன, வழக்கம் போல டபிள்ஸ் ரூம்தானே?... இருங்க, காலியாயிருக்கிற ரூமைப் பார்த்துச்சொல்லுகிறேன்,” என்று சொல்லிக்கொண்டே, நீண்டு தடித்திருந்த ஒரு புத்தகத்தைப் புரட்டினார் அவர். நன்றிக் கடன் மிக்கவர் பெயர் : சின்னத் தம்பி. ஆனால், பெரிய தம்பி அவர்! அன்றாடம் இருபத்து நான்கு மணி நேரமும் அவருக்கு அம்மாளிகைதான் ஞாபகம்! இல்லையென்றால், மலேசியாவில் மாளிகையின் முதலாளி இருந்துகொண்டு, தம் முதலை ஆள இவரை நியமித்திருப்பாரா?

காத்திருந்த மெளனத்தைக் கலைத்துவிட்டு, ஏதோசொல்ல வாயெடுத்த சிவஞானத்தை முந்திக்கொண்டு, “ஸார், வழக்கம் போல உங்களுக்குக் கிடைக்கக்கூடிய இருபத்தஞ்சாம் நம்பர் அறை, மாடியில் காலியாக இருக்குதுங்க. ஆமாம், டபிள்ஸ் ரூம்தான். புக் பண்ணட்டுமா ?” என்று வினவினார் சின்னத் தம்பி!

“வழக்கமாகக் கிடைக்கிற டபிள்ஸ் ரூம் இருக்குது. ஆனால் வழக்கமாய் வருகிற என் மனைவிதான் இந்தத் தரம் இல்லை!” இவ்வாறு எண்ணினான் நெஞ்சு அடைத்துக்கொண்டது. அவன் தன்னையும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு ‘ஒன் ப்ளஸ் ஒன்! ...’ என்று புள்ளி போட்டுக்கொண்டவனாக, ‘ஊம்’ கொட்டுவதற்கு எத்தனம் செய்தான். அதற்குள், பெரியவர் ரசீதொன்றை அவன் வசம் நீட்டிவிட்டார்.

வாடகை அறைக்குரிய ‘டெபாஸிட்’ தொகை ரூபாய் பத்தை, ஒரே தாளாக ‘ஸ்லாக்’ பையிலிருந்து நீட்டினான்

அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் தமிழகத்தின் புதிய அமைச்சர் தலைவரும் எதிரும் புதிருமாகக் காட்சியளித்தார்கள் படங்களிலே!

பணத்தைப் பெற்றுக்கொண்டு; அந்நன்றிக்குப் பிரதியாக ஒர் அசட்டுப் புன்னகையை முன்பற்கள் விழுந்திருந்த வாயோரங்களில் இழையவிட்டார் பெரியவர். சிவஞானத்தையும் குழந்தையையும் மட்டுமே கண்டாதாலோ என்னவோ, அந்தப் பெரிய மனிதரின் புன்னகை சுருங்கியது.