22
சத்திய தர்மம்
ஆம்; விதி இல்லையென்றால், வாழ்வுக்குச் சுவை இல்லை.
அதே போல, ‘சஸ்பென்ஸ்’ இல்லையென்றால் கதைக்கு — வாழ்வின் கதைக்குச் — சுவை இருப்பது இல்லை.
பின்னிரவு — மணி மூன்று, பத்து !... சுடுகாட்டு அமைதி! ...
டேப் ரெக்கார்டரை உடைத்துப் போட்டுவிடுவதாகப் ‘பாவலா’ செய்துகொண்டு அதை எடுத்த பெரியவர் சோமசேகர் அவர்கள், அந்த ஒலிப்பதிவு நாடாவைச் சுற்றி, பொத்தான் அழுத்தி இயக்கினார்,
மறுகணம்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
"சோமசேகரா ! என்னைக் கொல்ல முனையாதே !... என் மகன் ஞானபண்டிதன் குழந்தை !... என்னைக் கொல்லாதே ! இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது !... உன் குடும்பத்தை அழித்துவிடும் !... ஐயோ, வேலைக்கார.... செங்கோடா! அட, பாவி, நீயுமா அவனுடன் சேர்ந்துகொண்டாய் ? தெய்வமே, என்ன இப்படியா நீ செய்ய வேண்டும் ! ஐயோ... நான் செத்தேன் !” என்ற அபயக் குரலைத் தொடர்ந்து, துப்பாக்கி வெடிச்சத்தம் எதிரொலித்தது முடிந்தது.
மறுகணம் அமைதி.
சோமசேகர் அரைப்பைத்தியம் போலச்சிரித்தார். லெனின் தாடியையும் மீசையையும் தடவிக்கொண்டார். “மிஸ்டர் ஞானபண்டிதன் ! நான் கொலைகாரன்! இந்தப் பாவி உங்க சொந்த அப்பன் இல்லை ... ம்... இப்போது கேளுங்கள் !”
மறுபடியும் ஒலிப் பதிவுப் பெட்டி இயங்கி ஒலித்தது.
ஞானபண்டிதன் இயந்திரமானான். அவன் இதயம் அந்த ஒலியலைகளிலே மிதந்தது.