பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

“நான் சோமசேகர் !... நானல்ல உன் தந்தை !... ஞானபண்டிதா! ... உன் தந்தை செந்தில்தான் ! அவரும் நானும் சிலோனில் நூவரெலியாவில் அமர்க்களமாகத் தொழில் செய்து வளர்ந்தோம். பேரும் புகழும் பணமும் கிடைத்தன. கடைசிக் காலத்தில், உன் தந்தை செந்திலுக்கு என் பேரில் பொறாமை ஏற்பட்டது. தன்னால் நான் முன்னேறி வளர்ந்தது அவருக்குப் ‘பொசுபொசு’ப்பை உண்டாக்கிவிட்டது. ஒரு நாள் என்னைப் பலர் முன்னிலையில் ஏசவும் செய்தார். இதனால் அவர் பேரில் எனக்கு வஞ்சம் வளர்ந்தது. ஒரு சமயம் குடிபோதையிலிருந்த என்னை அவர் சாடவே, நான் அவரை — உன் அப்பாவைச் சுட்டுவிட எத்தனித்தேன். அப்போதுதான் டேப் ரெக்கார்டரை வைத்து இயக்கிய அவர், என் கையில் துப்பாக்கியைக் கண்டு, என் நிலையையும் ஊகித்துக் கத்தினார். என் கையாளாக இருந்தான் இந்த முரடன் செங்கோடன். கடைசியில் நான் உன் தந்தையைச் சுட்டுவிட்டேன் !...என் போதையும் ஆத்திர வெறியும் என்னைக் கொலைகாரனாக்கி விட்டன. இச்சந்தர்ப்பத்தில் அந்த டேப்ரெக்கார்டர் பெட்டியை நலியாமல் எடுத்துக்கொண்டு ஓடிவிடச் செங்கோடன் முனைந்தது பலிக்கவில்லை. நான் துடித்தேன்-அப்புறம்தான் என்னுடைய மாபெரும் தவறு எனக்குப் புரிந்தது.

“உன் தந்தை இறந்த அதிர்ச்சியில் உன் அன்னையும் குழந்தையான் உன்னை விட்டுவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்கள்!

“இப்பயங்கரமான முடிவுகளைக் கேட்ட என் மனைவி என்னைச் சுடுமொழிகளால் ஏசிச் சாடினாள். தன் பெண் குழந்தையும் தானும் இனி அனாதைகளாகிவிட்டதாகக் கதறினாள். பிறகு, அனாதைக் குழந்தையான உன்னை என் கைகளில் வைத்து, உடனே இந்தியாவுக்குச் செல்லும்படியும், நான் நல்லபடியாக மனம் திருந்தினால்தான் அவள் அங்கு தன் மகளுடன் வரமுடியுமென்றும் சொல்லி, என்னைக் கப்பலேற்றி விட்டாள். இல்லையேல், எந்தச் சமயமும் அவள் போலீசுக்கு என்னைப் பற்றித் தெரிவித்துவிடுவதாகவும் எச்சரித்தாள்.

“நான் தாயகம் திரும்பினேன்.