பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

"மல்லிகா !...” என்று ஒரு முறை தன்னுள் சொல்லி ஏக்கப் பெருமூச்சிழைத்தான் அவன்.

அப்போது, “அண்ணாச்சி, அந்தப் பீத்துணியை எங்கிட்டே போடுங்க. நான் கசக்கிட்டு வந்துடுறேன்” என்ருன் ரிக்ஷாக்காரன்。

அவனை ஏறிட்டுப் பார்த்த சிவஞானம் செருமத் தொடங்கினான். “வேண்டாமப்பா என் விதி என்னோடவே இருக்கட்டும் !...பொழுது படட்டும். நானே என் கடமையைச் செஞ்சுக்குவேன்! ...” என்றான். குரல் தழுதழுத்தது. “நீ உட்காரப்பா !” என்று வேண்டினான்.

“ஆண்டவன் ரொம்பப் பொல்லாதவன், அண்ணுச்சி !” ரிக்ஷாக்காரன் பேச்சில் வெஞ்சினம் எடுப்பாக இருந்தது. நின்றுகொண்டே இருந்தான்!

“விதிதானப்பா ரொம்பப் பொல்லாதது!”' என்றான் சிவஞானம். அனுபவித்த வெங்கொடுமையின் தணல் இருந்தது, பேச்சில்.

அந்தித் தென்றல் சுகம் காட்டியது.

“விதின்னு ஒண்னு இருக்குதுங்களா, அண்ணாச்சி ?” ரிக்ஷாக்காரனின் வினாவில் ஆத்திரம் கோலோச்சியது.

“விதின்னு ஒண்னு இல்லேன்னு சொல்றீயாப்பா ?” ஏக்கத்தின் தாபத்துடன் அவனை நிமிர்ந்து ஊடுருவிப் பார்வையிட்டான் சிவஞானம். அவன் இதயத்தில் சாவின் சந்நிதியில் ஊசலாடி ‘வரம்’ கோரிய மல்லிகா தோன்றினாளோ ?

“ஆமாங்க!” அழுத்தமாகப் பதில் மொழிந்தான் ரிக்ஷாவாலா.

“அப்படின்னா, தாயில்லாக் குழந்தையாக என் செல்வம் தவிக்கிறதுக்கும், மனைவியை இழந்த துரதிர்ஷ்டசாலியாக நான் ஏங்கிக்கிட்டிருக்கிறதுக்கும் யார் பொறுப்பின்னு உனக்குத் தோணுது ?” .

“ஆண்டவனேதான் இந்தக் கொடுமைக்குப் பொறுப்பு !” என்று அழுத்தம் திருத்தமாகச் செப்பினான் அந்த ஏழை.

“ஆண்டவனை நல்லவன் என்று அல்லவா எல்லாரும் சொல்றாங்க? ”