பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

நினைக்கத் தொடங்கினேன்னா, அப்புறம் தாயில்லாத என் குழந்தையை எப்படி என்னாலே வளர்க்க முடியும் ? நான் எப்படி இந்தச் சிசுவை வளர்க்க இயலும் ... ‘அம்மா’ன்னு கூப்பிடுதே இது, நான் எங்கே போய்க் கூப்பிடுவேன் இதோட அம்மாவை ? இப்ப, என்னமோ ஒரு ஞாபகத்திலே தூங்க ஆரம்பம் பண்ணிடுச்சு. ஊம், அதானாலேதான் விதி இதோட தாயைக் காணாமல் அடிச்சிட்டுது அப்படின்னு சொன்னேன் நான் ! நீ கூட முழிச்சே !... நாம ரெண்டுபேரும் ஒரே வகையான கிலேசத்தின் சந்நிதானத்திலே வகையற்று நின்னுக்கிட்டிருக்கோம் ! நீ மனசைத் திடப்படுத்திக்கிட்டு இருப்பா !” என்று தேறுதல் சொன்னான் சிவஞானம், விரக்தியைக் கடந்து பேசினான். தனக்குத்தானே தலையை உலுக்கியபடி இருந்தான்!

“படிச்சவங்க நீங்க. உங்களுக்கு ஆறுதல் சொல்ல எனக்கு மார்க்கம் தெரியலேங்க !...ராஜாவை நல்லபடியாய்க் காப்பாத்திப்பிடுங்க !...நீங்க நம்பிக்கிட்டிருக்கிற—இன்னமும் நம்பிக்கை வச்சிருக்கிற அந்தப் பகவான் கட்டாயம் ராஜாவைக் காப்பாத்திக்கொடுப்பாருங்க !...ஜனதாவுக்குத்தானுங்களே நீங்க பட்டணத்துக்கு ரயிலேறப் போறீங்க?...” என்று விசாரித்தான் ரிக்ஷாக்காரன்.

“ஆமாப்பா !”

“அப்பாலே நானே வந்து உங்களை அழைச்சுக்கிட்டுப் போய் ரயில் ஏற்றி விடுறேனுங்க !...வாசலிலே ரிக்ஷா நிக்குது: புது ஆட்சியிலே போலீஸ் கெடுபிடி ஜாஸ்திங்க !”

“ரொம்ப நன்றியப்பா ! ஒரு காப்பி மட்டும் சாப்பிட்டுப் போ!” என்றான் சிவஞானம். ஒரு மின்விசையை அழுத்தினான்.

அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் வந்த பையன், இரு செட் காப்பி கொணர்ந்தான்.

ரிக்ஷாக்காரன் கையெடுத்துக் கும்பிட்டபடி பிரிந்தான். அந்த ஏழை மொழிந்து சென்ற வார்த்தைகளும், ‘ராமையா’ என்ற அவன் பெயரும் சிவஞானத்தின் நெஞ்சில் அலை பாய்ந்து, புதிய தெளிவை உண்டுபண்ணத் தொடங்கின !