பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாவது அம்மா !

ராமையா அப்பொழுது சிவஞானத்தின் கண்களுக்கு ஒரு ரிக்ஷாக்காரனாகவே தோற்றமளிக்கக் காணோம்! - விவேகம் மிகுந்த — வாழ்வின் அனுபவம் கைவரப்பெற்ற —பரிபக்குவம் அடைந்த ஒர் அசல் மனிதனாகவே தோன்றினான். சுயநலமும் கபடுசூதும் ஆசைப்பித்தும் கொண்ட மனிதப்பிண்டங்களின் நெரிசலுக்கு மத்தியில் பழகிவிட்ட அவனுக்கு, அந்த ஏழைக் கூலிக்காரன், அன்றாடக் கூலியில் வயிறு வளர்க்கும் ஒரு ரிக்ஷாக்காரனாகத் தோன்றாததில் வியப்பில்லைதான். அவன் சராசரி மனிதனுக்கும் கூடுதலான ஒர் அந்தஸ்துடன், அச்சமயம் சிவஞானத்தின் படித்துணர்ந்த மனத்தினிடம் மதிப்பெண் பெற்று விளங்கினான்.

ராமையாவின் பழக்கம் தனக்கு ஏற்பட்ட நிலை தெய்வச் சித்தத்தின் ஏதோ ஒரு தூண்டுதல் போலவே அவனுடைய உள்ளுணர்வுக்குப் பட்டது. பட்ட மரம் துளிர்த்த பாங்கிலே, அவனுள் ஒரு புதிய தெளிவும் பிறந்திருந்ததை அவன் தீர்க்கமாக உணர்ந்திருந்தான். ராமையா எப்படி வாழ்க்கையை புதிய கோணத்தில் சித்திரித்துவிட்டான் !...

மல்லிகா சித்திர்த்துக் காட்டியதை விடவா? ‘மல்லி !...’

முப்பது நாட்களுக்குப் பிறகு சிவஞானத்திற்கு அக்கணம் தான் சிரிக்க வேண்டும் போலிருந்தது. அழுது அழுது பழக்கப்பட்டு —பழக்கப்படுத்திக்கொண்டு காலத்தின் நாட்களை நழுவ விட்டவாறு இருந்த அவனுக்குத் தன்னுடைய இந்தப் புதிய மாற்றம் தவிர்க்க முடியாததொரு நிர்ப்பந்தம் போலவும் தோன்றிற்று. அவன் தன் செல்வத்தைப் பார்த்த போது, அது அமுதப் புன்னகையைச் சிந்திக்கொண்டிருந்தது. அப்பா சிரிக்கப் போகிறாரென்று அந்தத் தெய்வத்திற்குத் தெரியும் போலும் !...