பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பளித்தாளே மல்லிகா ? — “அத்தான், அழகான இயற்கையின் அழகு உச்சத்தில் இருக்கும் நேரம், உதய காலமும் இம்மாதிரியான அந்திப் பொழுதுந்தான் ! இல்லீங்களா ?” என்றாள் மல்லிகா .

அதற்கு அவன் அர்த்தபுஷ்டியுடன் சிரித்தான். “உனக்கு இந்த வெளிச்சம் ஒத்துக்காதோன்னு நினைச்சுத் தான், நான் கதவை மூட நினைச்சேன். மற்றப்படி, எனக்கு இயற்கையென்றால் எவ்வளவு பிராணன் என்கிற ரகசியந்தான் உனக்கு இந்தக் கொஞ்ச காலத்துக்குள்ளே தெள்ளத் தெளியப் புரிஞ்சிருக்குமே!” என்று நடப்பைப் பிட்டு வைத்தான் அவன்.

அவள் அப்பொழுது எத்துணை கருவத்தோடு புன்னகை செய்தாள்?

தன் மனப் போக்குக்கு அனுசரணையாகத் தன் துணைவன், பேசினால், துணைக்குரிய துணைக்கு மகிழ்வு பூக்காதா?

ஆனால், இப்பொழுது அதே மாலை வெப்யில் அவனது பழைய நினவினைத் தூண்டி, அந்நினைவை வேதனையாக்கித் துளைத்து, அந்தச் சங்கடத்தின் எரிச்சலை, மிகைப்படுத்திக் காட்டிவிடவே, அவன் அவ்வாறு தன்னை மறந்த பதட்டத்தில் பலகணிக்கதவை அடைக்கத் துடித்தான். என்றாலும், மல்லிகா நினைவு — அமரநினைவு அவனைத் தடுத்தது : மல்லிகா !...”

நாற்காலியில் அமர்ந்திருந்தவன் சிசுவைப் பார்த்தான்.

அதன் இதழ்களின் செம்மையில் அழகிய உயிர்ப் புன்னகை நெளிந்து அடங்கியது. நல்ல தூக்கம். எழுந்தான் சிவஞானம் : குழந்தையையே இமைக்காமல் ஒரு கணம் நோக்கினான். அவன் கண்கள் குளமாயின. ‘மல்லிகா !...’ என்று அவன் நெஞ்சம் விம்மியது. மல்லிகாவின் நினைவுச்சின்னத்திற்கென்றுதான் அதன் மூக்கும் கண்களும் மல்லிகாவினுடையதைப் போலவே அமைந்துவிட்டிருக்கின்றனவா? படைப்பின் விளையாட்டு இவ்வளவு சித்திரவிசித்திரம் கொண்டதா ? கண்களைத் துடைத்துக்கொண்டான். சொட்டுக் கண்ணீர் அதன் பட்டு மேனியில் சிந்தினாலும், அது விழித்துவிடுமே ! கழுத்தில் இழைந்து கிடந்த பவுன் சங்கிலியின் பதக்கத்தைச் சமன் பார்த்து இழுத்துவிட்டான். நீட்டி நெளித்துக்கொண்டிருந்த