21
விட்டது ! அவன் பெருமூச்சுடன் தன்னுடைய கட்டிலைச் சரணடைந்தான்.
அழைக்கும் மின் விசை மணிச் சத்தம் அழகு மாளிகையின் எடுபிடிப் பையனை இட்டுக் கொணர்ந்தது. பெயர்தான் பையன். வந்தவன் ஒரு பையனுக்குத் தந்தை.
“புண்யகோடி வந்திருக்கேன் ஸார் ! என்ன வேனும் ?” மேஜைமீது இருந்த காலி காப்பி ‘செட்’ இரண்டையும் கீழே ஒதுக்கமாக எடுத்து வைத்தபடி கேட்டான்.
“ஒரு பாக்கெட் வில்ஸ் வேணும். பாக்கித் துட்டைக் கொண்டாப்பா !” விளக்கத்திற்குச் செலாவணி அந்தஸ்து தர ஒற்றை ரூபாய்த் தாளொன்று பளிச்சிட்டது.
சிவஞானம் மீண்டும் ரிக்ஷாக்காரன் ராமையா உதிர்த்துச் சென்ற வாசகங்களை அசைபோடலானான்.
ராமையா தற்காலிகமாக விடை பெற்றுப் பிரிகையில் சொன்னான் : “அண்ணாச்சி, வாழ்க்கை என்கிறது ஒரு கடமை. இதிலே தியாகம் அது இதுன்னு கண்டபடி நம்மைக் குழப்பிடுறாங்க சில பேர்வழிங்க !... வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்கிறதுக்குத்தான் கடவுள் நம்மை இந்தப் பூலோகத்திலே பிடிச்சுப் போட்டிருக்கான் ... ஆகையினாலே, வாழ்க்கையை வாழ்க்கையாக — அந்த வாழ்க்கைக்குரிய மனோதர்மம் குலையாமல் வாழ வேண்டியதுதான் கடமை ! உங்கள் ராஜவை, நீங்க ஒண்டியுமாய் வளர்க்கவே முடியாது. வேறே ஆயாளாலேயும் காப்பாத்த முடியாது !...ஆனபடியாலே, அதுக்கு ஒரு ‘இரண்டாவது அம்மா’வை நியமனம் செஞ்சிடுங்க. இதுதான் உங்களோட அதிமுக்கியமான கடமை ! ... இது என் சின்ன மூளைக்குத் தெரிஞ்ச விஷயம் ! ஒன்றை இழக்கிறதாலேயும் தியாகம் வளரும் எதையும் இழக்காமலேயும் தியாகம் உருக்காட்ட இயலுமுங்களே !... நீங்க உங்க சம்சாரத்தோட ஞாபகம் ஒண்ணே இனி மேல் சதம்னு நினைக்கலாம். அதிலே தான் உங்க தியாகம் இருக்கிறதாகவும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் நினைச்சு உங்களை வெறும் சொல்லாலே புகழலாம். ஆனா, உங்க ராஜாவை — உங்க மனைவியோட செல்லக் குழந்தை ராஜாவை மறந்திடாதீங்க! ...உங்க பேச்சு, மனசு,