பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லுகிறதாமே ? இது உண்மைதானோ ?...’

‘...உழவன் போல உழைத்துழைத்து
உண்மை கண்ட உத்தமன் !
எழுதி எழுதி இந்த காட்டின்
விதியை எழுதி வைத்தவன் !...’

கவிஞர் எஸ். டி. சுந்தரம் அவர்களின் ‘நேரு அஞ்சலி’ வரிகள் சிவஞானத்தின் இதயத்தைத் தொட்டன. மனம் நெகிழ்ந்தான். ‘ஆஹா ! எத்துணை அழகிய கற்பனை இது . துயரத்தின் ஆழத்தை எவ்வளவு துலாம்பரமாக வடித்துக் காட்டிப் பாடிவிட்டார் கவிஞர் !... எழுதும் விதிக்கே ஒரு புது விதி செய்துவிட்டாரே அவர் : ... ஆஹா !...

புரட்டினான் இதழை.

‘...தஞ்சை மாவட்டத்தில் கூடுதலாக ஆறு லட்சம் எக்கர்களில் இரண்டு குறுகிய கால நெற்பயிர்களைச் சாகுபடி செய்யும் திட்டம் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து, முதலமைச்சர் திரு அண்ணாதுரை,நேற்று, உணவு கார்ப்பரேஷன் பிரதிநிதிகள், தமிழக உணவு, விவசாயத் துறை அதிகாரிகள், போர்டு நிறுவன ஆலோசகர் திரு என்ஸ்மிங்கர் ஆகியோருடன் விவாதித்தார் !...’

செய்தி மேலும் நீண்டது. அதைப் போலவே சிவஞானத்தின் பெருமூச்சும் நீண்டது. திரும்பிய மனம் குழந்தையை நாடியது. அது லேசாகப் புரண்டது. பிறகு, ஒருக்களித்தபடி உறக்கத்தைத் தொடர்ந்தது.

எழுந்தான்.

தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரக் கலசம், நியூ டவர் டாக்கீஸின் உச்சிமீது பறந்த தேசியக் கொடி, நகராட்சி மன்றத்தின் பஸ் ஸ்டாண்ட், புதிய நூல் நிலையம், புதிய அரசின் பழைய துரிதப் பேருந்து நிலையம், ராஜா மிராசுதார் மருத்துவமனை, இடிந்த கோட்டைகள் போன்ற காட்சிகள் அவன் கண்களின் முன்னே ஆலவட்டம் சுற்றின்.

சுற்றும் தேர், நிலைக்கு வந்துதான் தீர வேண்டும்.

மனமும் அப்படித்தான் !

அந்தி மயங்கிவிட்டது.