பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கீழ்வானத்தில் வெண்ணிறக் கோளம் கோலம் காட்டி வினாடிகள் பல கடந்திருக்க வேண்டும்.

மின்விசைப் பொத்தான் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியது.

சிவஞானம் நாற்காலியில் அமர்ந்தான். மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்த உண்மையை அவனது கைக்கடிகாரம் சுட்டியது. ‘இன்னும் இரண்டு மணி நேரம்தான் இங்கே வாசம் !...’ என்று நினைத்தான். அந்நினைவு அவனைத் தஞ்சைச் சந்திப்பு நிலையத்திற்கும் எழும்பூர்ச் சந்திப்புக் கூடத்திற்குமாக அலையச் செய்தது. இனம் விளங்காததொரு பயமும் படபடப்பும் அவனுள் எழும்பிப் பேயாட்டம் போட்டன. ‘நான் என் ராஜாவை எப்படி வளர்க்கப் போறேனோ, அந்தத் துப்பு அந்த ஆண்டவனுக்கேதான் வெளிச்சம் !... ஈசா !...’ விழி விளிம்புகளில் நீர்ச்சரம் ஊசலாடியதைக் கண்ணாடியின் விழிகள் காட்டின.

மறுகணம், தன்னைப் பற்றிய சுயதரிசனத்தில் மனம் கட்டுண்டான் சிவஞானம். தன்னையும் மல்லிகாவையும் சந்திக்கச் செய்த அந்தப் புனித அக்கினியை நினைவுகூர்ந்தான். அதே அக்கினிதான் அவனுடைய ஆருயிர் மல்லிகாவையும் உண்டுவிட்டதா ?... தன்னை எண்ணியவன், அக்கினியை எண்ணினான் : அக்கினியை நினைத்தவன், விதியை நினைத்தான் :—விதி என்ற ஒன்று இருக்கத்தானே செய்கிறது?—பின், அந்த ரிக்ஷாக்காரன் விதி பொய் என்றானே ... அப்படியானால், பொய்யாகிப்போன அவனது இனிய பாதியான மல்லிகாவின் மறைவுக்குக் காரணம் ‘விதி’: இல்லையா ? ராமையா சொல்லியதொப்ப ஆண்டவன்தான் காரணமா? அவன் இதயம் அழுதுகொண்டிருப்பதற்கு, இதயமற்ற ‘அவன்’ செயல்தான் ஆதாரமா? ஆதார சுருதியாகி, எங்கோ ஒரு முடுக்கில் இருந்துகொண்டு சாட்டையில்லாப் பம்பரமாகச் சுழன்றுகொண்டு இருப்பதாகக் கதைக்கப் படுகிறதே அந்தத் தெய்வம், இப்படிப்பட்ட வேதனைகளை யெல்லாம் ஏன் பிறக்கச் செய்ய வேண்டும்? அதற்குரிய காரணம் என்ன ? அதுதான் சிருஷ்டியின் புதிரா ? இல்லை, அதுவேதான் சிருஷ்டியின் தத்துவமா ?...