பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

சிவஞானத்திற்கு மூளை குழம்பியது.

கோடைத் தென்றலுக்குச் சுகம் கூடுதல்.

சிகரெட்டின் கதகதப்பு உள்மனத்தின் சூட்டை ஆற்றவில்லை. நெற்றிப் பொட்டின் இரு முனைகளிலும் வலது கரத்தின் கட்டை விரலேயும் நடு விரலையும் அழுந்தப் பதித்தவாறு, கண்களை இறுக மூடிக்கொண்டான் அவன்.

புறக்கண்கள்தாம் மூடிக்கொண்டனவே தவிர, அகக் கண்கள் திறந்தேயிருந்தன. அவற்றின் மோனத் திரையில் ரிக்ஷாவாலா ராமையாவின் ஏழைமைக் கோலமும் அறிவுச்சுடர் தெறித்த கண்களும் நிழலாடின. ‘எனக்கு வாய்த்த மகத்தான துயரம் போலவே அவனுக்கும் வாய்த்துவிட்டதே ! பாவம், பரிதாபம் !...’ ஆறுதல் பரிவர்த்தனை என்ற ஒரு மாயமந்திர நடப்பு மட்டும் இல்லையென்றால், உலகமே ஒரு புண்ணிய பூமியாக ஆகியிருக்க வேண்டியதுதானோ ? புவனமே ஒரு பைத்தியக்கார விடுதியாக உருமாறியிருக்கத்தான்வேண்டுமோ, என்னவோ ? - -

சற்றுமுன் தன்னிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுச் சென்ற போது, தன்னுள் ஒரு தெளிவை — ஒரு புதிய தெளிவை உண்டுபண்ணிய ராமையாவின் பேச்சு, அடுத்த சில நிமிஷங்களுக்குள்ளாக எங்கோ ஓடி ஒளிந்துகொண்ட விந்தை அவனுக்குப் புரியாப் புதிராகச் சிரித்ததை அவன் மறக்க முயன்றாலும், அச்சிரிப்பு அவனை மறக்காமல் தொற்றிக்கொண்டு அவனோடு விளையாடிக் கொண்டிருந்ததே

பாவம், சிகரெட் என்ன செய்ய முடியும் ?

அவன் அழுதான்.

சில கணப்பொழுதிற்கு முந்தி அவன் புன்னகை பூத்தானே —முப்பது நாள் சோகத்தைக் கடந்து புன்னகை பூத்தானே, அப்புன்னகைப்பூ ஏன் அதற்குள் வாடிவிட்டது ?

‘மல்லிகா !’ — சிவஞானம் மண்டையில் அடித்துக்கொண்டு விம்மினன்.

மல்லிகா, வாடாத புன்னகைப் பூ ஏந்தி அவனது மனப் பந்தலில் தோன்றினாள்.

அவன் மேலும் விம்மினான்.