பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


‘மஹாலஷ்மி !’ ...

கேவலம், ஐந்து நிமிஷங்கள் ! — ஜந்தே ஐந்து நிமிஷங்கள் தாம் !...ஆனால், இதற்குள் பாவம், சிவஞானம் ஐயாயிரம் தரம் செத்துச் செத்துப் பிழைத்துவிட்டான் ! விடாப்பிடியாக அழுது ‘லூட்டி’ அடித்த பாலகன் ராஜாவை அவனால் சமாதானப்படுத்த முடியவில்லை. தவித்துத் துடித்தான். தலையிலடித்துக் கொண்டான். குழந்தையோ “...ம்...மா ! அ...ம்....மா !” என்று வீரிட்டலறியது. அவன் அதன் அம்மாவை எப்படிக் கொணர்வான் ? எங்கே போய்க் கொண்டுவருவான் ?

தெய்வமே !....

ராஜா, “அ...ம்...மா !” என்று அலற, சிவஞானம் “அ...ப்...பா !” என்று சொல்லிக் கொடுத்து அலறினான் உருக்கமாக !-

குழந்தைக்கு ஏதும் புரியவில்லை போலும் ! தந்தையின் அழுகைக்கு ஏதும் புரியவில்லை.

குழவியின் அலறல் அடங்கவில்லை. கொடுக்கப்பட்ட பால் சீசாவை உதறிவிட்டது; குலுக்கிக் காட்டிய கிலுகிலுப்பையைத் தள்ளிவிட்டது. கைகால்களை உதறிக்கொண்டு வீரிட்டது. அழுகை தொடர்ந்தது; தொண்டை கம்மியது; புகைச்சல் இருமலும் நிற்கவில்லை. திக்கும் புரியவில்லை, திசையும் புலனாகவில்லை சிவஞானத்துக்கு. அவனது தந்தை உள்ளம் அனலிடை பூவாகக் கருகியது ; அனலிடை மெழுகாக உருகியது ; அனலிடை வெண்ணெயாய்க் கசிந்தது.

ஏதோ ஒரு வெறி மூள, குழந்தையைத் தோளினின்றும் பிரித்து எடுத்து, அதைக் கட்டிலில் பையக் கிடத்தினான் அவன். மறுகணம், குழந்தைத் தெய்வத்தின் திருச்சந்நிதானத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்; அழுதான்; புரண்டான் ;