பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

‘தெய்வமே, என் தெய்வத்தைக் காப்பாற்று!’ இன்று புலம்பினான்.

ஏதோ ஒரு நம்பிக்கையுடன் எழுந்தான் அவன்.

அப்போது :

குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது.

சிருஷ்டியின் புதிர் போல இருந்தது அச்செயல்.

‘காண்பது கனவா, நனவா ?’ என்று மட்டுப்பட மறுத்தது அவனுக்கு. ஆதுரம் துள்ள ஆவல் மேலோங்கக் குழந்தையை வாரி எடுத்து உச்சி மோந்தான். பீறிட்டடித்த மூத்திரம் தரையில் சிதறி, அவன் இதழ்களைத் தாண்டியது. ஆனந்தம் பீறிடச் சிரித்தான். ‘அ.ப்...பா!’ என்று மழலை பயின்றது செல்வம் ராஜா ! மல்லிகா ! என்று மெய்ம்மறந்தான் சிவஞானம். மயிர்க்கூச்செறிந்தது அவனுக்கு.

இப்போது ராஜா, ராஜகளையுடன் திகழ்ந்தது, ராஜ கம்பீரத்துடன் மூரல் சிந்தியது. கொடுக்கப்பட்ட பால் சீசாவைத் தட்டிவிடாமல் காலி செய்தது ; தட்டாமல் பாலைக் குடித்தது. குஞ்சுக் கால்களை அப்பாவின் வயிற்றில் முட்டிய வண்ணம், கருமமே கண்ணானது !

சிவஞானத்தின் வயிறு எப்படி நிறைந்துவிட்டது !‘ ஐந்து நிமிஷத்துக்குள்ளாற எப்படிப்பட்ட பயங்கரச் சோதனையை நடத்திட்டான் என் மகன் ராஜா !... என் மல்லி பிடிசாம்பலாக ஆன அன்னைக்கு நடந்த கூத்தாட்டம் இப்பவும் நடந்திட்டுது. ஒரு நாள் பொழுது ஒரு யுகமாய்த் தோணுதே !... தெய்வமே, நான் எப்படி என் ராஜாவை வளர்க்கப்போறேன்?...பகவானே, என் ராஜாவையும் என்கிட்டேயிருந்து தட்டிப்பறிச்சிக்கிணு போயிடமாட்டியே?... இந்தத் தங்கம் மட்டும் இல்லாமலிருந்தால், நானும் என் மல்லியைத் தொடர்ந்திருப்பேனே ... ஈசனே !... என் கண்மணியை நினைக்கிற இந்த மனசிலே எதிர்காலம் ஏன் இப்படிப் பயங்கரமாய்த் தோணுது?’ மனம் மறுகியது. -

சோழிகள் மாறி மாறி இடம் பெயரும் சொக்காட்டான் ஆட்டம் அவன் மனத்தில் நடந்தது.