குழந்தை கண்ணயர வேளை பார்த்துக்கொண்டிருந்தது. தரையில் படர்ந்திருந்த ஈரத்தைத் தாண்டியவாறு, கட்டில் மெத்தையில் குழந்தையைக் கிடத்தினாள். பிசிறு தட்டியிருந்த தலைப்பக்கத் துணியை ஒழுங்கு செய்தான். இடுப்புத் துணியை முதுகுப்புறத்தை ஒட்டித் தள்ளினாள். சப்பும் ரப்பரைக் குழந்தையின் செப்பு வாய்க்குள் பொருத்தினான். அது ரப்பரைச் சுவைத்தது, வளையத்தைப் பற்றியவாறு, ஒழுகிய சளியை டவல் கொண்டு ஒத்தினான். ‘விக்ஸ்’ டப்பாவைத் திறந்து, துளி எடுத்து, குழந்தையின் நாசித்துவாரங்களிலும் தொண்டைக் குழியிலும் நெஞ்சின் இருபுறங்களிலும் தடவினான். அது உறங்கியது ; சப்பும் ரப்பர் வளையம் நழுவியது.
சாந்துப் பொட்டுக்கென்று இப்படியொரு கவர்ச்சியா?
தூக்கத்தில் சிரித்தது மதலை.
சிவஞானம் சொக்கிப் போனான்.
ஆஹா !படைப்பின் தெய்வம் அற்புதமான ரசிகன்தான் ?... ஆமாம், அட்டியில்லை !...
ஆனால், குழந்தை எங்கே அழத்தொடங்கிவிடுமோ என்று ஏக்கத்துடன் தவித்துக்கொண்டிருந்தான். பாத்ரூமுக்குப் போய், குழந்தை அசுத்தம் செய்த துணியை அலசி வர வேண்டுமென்று இராப்பொழுதிற்காகக் காத்திருந்தான். ஆனால் துங்கும் குழந்தையைத் தனியே விட்டுவிட்டு எப்படிச் செல்வான் ? தான் கசக்கித் தருவதாக முன்வந்த ராமையாவின் ஈர நெஞ்சை மீண்டும் வாழ்த்தினான் அவன்.
மல்லிகாவின் ‘அந்த வரத்தை’ எப்படி மறப்பான் சிவஞானம்.
ராமையாவின் நினைவு சிவஞானத்தைப் புதிய உலகிற்கு அழைத்துச் சென்றது. அவன் பேசிய பேச்சு மீண்டும் சிவஞானத்தின் மனத்தில் எதிரொலி பரப்பியது. தன்னையும் தன் குழந்தையையும் வைத்து, எதிர்காலத்தைப்பார்த்த போது உண்டான பயமே ஒரு புதிய உலகமாகத் தோன்றத் தொடங்கியது . அப்புதிய புவனத்தில் ராமையா-ரிக்ஷாக்காரன் ராமையா-ஒரு புதிய தெளிவை மீளவும் உண்டுபண்ணிக் கொண்டிருப்பதாக ஒரு பிரமை —ஒரு மயக்கம் ஏற்பட்டது.