32
அவனுள் ! சில நிமிஷங்களுக்கு முன்னம் இம்மாதிரி தன்னுள் ஒரு புதிய தெளிவு உண்டாக, ஆனால் அத்தெளிவு தோன்றத் தொடங்கிய அடுத்த சில கணங்களுக்குள்ளாகவே குழப்பமாக உருவெடுத்து—உருக்காட்டிய விசித்திரச் சோதனையையும் அவன் மறந்துவிடவில்லை. அப்போதைக்குப் பிறந்த தெளிவுக்கு அடித்தளமாக ஒலித்த-அடி நாதமாக இசைத்த ராமையாவின் சொற்களைக் கோவைப்படுத்திக்கொண்டான் சிவஞானம்.
‘...அண்ணாச்சி, வாழ்க்கை என்கிறது ஒரு கடமை. இதிலே தியாகம் அது இதுன்னு கண்டபடி நம்மைக் குழப்பிடுறாங்க சில பேர்வழிங்க !... வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்கிறதுக்குத் தான் கடவுள் நம்மை இந்தப் பூலோகத்திலே பிடிச்சிப் போட்டிருக்கான் !... ஆகையினாலே, வாழ்க்கையை வாழ்க்கையாக—அந்த வாழ்க்கைக்குரிய மனேதர்மம் குலையாமல் வாழ வேண்டியதுதான் கடமை ! உங்க ராஜாவை நீங்க ஒண்டியுமாய் வளர்க்கவே முடியாது : வேறே ஆயாளாலேயும் காப்பாத்த முடியாது !. ஆனபடியாலே, அதுக்கு ஒரு ‘இரண்டாவது அம்மா’வை நியமனம் செஞ்சிடுங்க. இதுதான் உங்களோட அதிமுக்கியமான கடமை !.. இதுதான் என் சின்ன மூளைக்குத் தெரிஞ்ச விஷயம் !... ஒன்றை இழக்கிறதாலேயும் தியாகம் வளரலாம் ; எதையும் இழக்காமலேயும் அதே தியாகம் உருக்காட்ட இயலுமுங்களே !.... நீங்க உங்க சம்சாரத்தோட ஞாபகம் ஒண்ணே இனிமேல் சதம்னு நினைக்கலாம். அதிலே தான் உங்க தியாகம் இருக்கிறதாகவும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் நினைச்சு உங்களை வெறும் சொல்லாலே புகழலாம்! ஆனா, உங்க ராஜாவை——உங்க மனைவியோட செல்லக் குழந்தை ராஜாவை மறந்திடாதீங்க !...உங்க பேச்சு, மனசு, லட்சியம் எல்லாத்தையும் படிச்சறிஞ்சுக்கிட்டதிலேருந்துதான் நான்——இந்த ஏழை உங்க கிட்டே உரிமையோடு——என் மனிதாபிமானக் கடமையோடு இப்படி வெட்டவெளிச்சமாய்ச் சொல்லுறேன் !... அப்படி நீங்க உங்க ராஜாவுக்கு ஒரு இரண்டாவது அம்மாவைக் கொடுத்தால் தான், நீங்க நம்பியிருக்கிறபடி, உங்க தெய்வம் உங்க ராஜாவை வளர்க்க முடியும்! ... வளர்த்துக் காப்பாத்தவும் முடியுமுங்க, அண்ணாச்சி !...’