உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

அறந்தாங்கி மண்ணுக்கு நாம் கடமைப்பட்டவங்க. என்னை நம்பு. நீ நம்புகிற அந்நம்பிக்கையைச் சாட்சி வைத்துச் சொல்லுகிறேன். என்றென்றுமே நீதான் எனக்கு உயிர், உலகம் எல்லாம் !... என் நெஞ்சிலே என் மல்லியைத் தவிர வேறொருத்தி என்றுமே புகுந்திட இயலாது, மல்லி !...” என்று கையடித்துக் கொடுத்தான் அவன் ;

திடுதிப்பென்று அவன் மனத்தினுள் ராமையா புகுந்தான். அவன் அவனுள் புகுந்து விளையாட நேரம் ஏது, காலம் ஏது ? அவன் உண்டுபண்ணிக் காட்டியதாகச் சிவஞானம் கருதிய அந்தப் புதிய தெளிவைப் பறித்துக்கொண்ட சாகஸம் மல்லிகாவுக்குச் சிவஞானம் கையடித்துக் கொடுத்த வாக்குறுதியைத்தான் சார்ந்ததா ? அதன் விளைவாகத்தான் அவன் மனம் அல்லாடி, அவன் சிகரெட்டுப்பெட்டியைத் தஞ்சமடைந்தானோ ?

மல்லிகாவை மீண்டும் எண்ணினான் சிவஞானம். இப்போது அவள் மரணப்படுக்கையில் இருந்தவாறே காட்சி கொடுத்தாள். “அத்தான், என்னோட இந்த மண்வாழ்க்கை இன்னம் கொஞ்சப் பொழுதுக்குத்தான் !...அதுக்குள்ளே உங்க கிட்டே ஒருவரம் வாங்கிக்கிட ஆசைப்படுகிறேனுங்க, அத்தான்! நீங்க என்னை எவ்வளவோ சந்தோஷமாய் வச்சுக் காப்பாத்தினீங்க. நாம் வாழ்ந்தது கொஞ்ச காலம்தான் என்றாலும், எனக்குப் பல நூறு வருஷம் உங்களோடே வாழ்ந்ததாவே ஒரு திருப்தி மனப்பூர்வமாய் உண்டாகுது. ஆனா, விதி நம்மளைத் திசை பிரிக்கச் சதி செஞ்சுக்கிட்டிருக்குது. நான் என் ராஜாவுக்கு——நம்ம ராஜாவுக்கு அம்மாவாய் இனியும் இருக்கக் கொடுத்து வைக்க முடியாதின்னு என் மனசுக்குத் திடமாய்த் தோணிடுச்சு. ஒரு வரம் தரவேணும் நீங்க !....என்றென்றைக்குமே நீங்க என்னை மறக்கமாட்டீங்க என்கிறதை நான் சத்தியமாய் மறக்கவே மாட்டேன். அதே வாக்கை நீங்க மனசொப்பிக் கட்டிக் காத்துக்கிடவும் செய்வீங்க. உங்க மனசு எனக்குத் தெரியும். உங்க மனோதர்மத்தை-திடத்தை-வைராக்கியத்தைப் புரிஞ்சவ நான் ! ஆனா, நம்ம ராஜாவுக்கு——என் ராஜாவுக்கு ஒரு அம்மா வேணுமே ; அதுக்கு ஒரு இரண்டாவது தாயைக்