பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

துடித்தன. இரத்தக் கண்ணீரின் கறை நெடுகிலும் படிந்திருந்த அந்நிழற்படத்தை துடித்துத் துவண்ட நெஞ்சால் பார்த்தான்.

நிழலாகிப் போய்விட்ட மல்லிகாவின் நிழற்படம் அல்லவா அது !

மரணத்தை அணைத்தபின், அணைந்த விளக்காகிவிட்ட மல்லிகாவைப் படம் எடுக்கச்செய்தான் அவன். ‘தெய்வமே ... மல்லிகா !’ —— தெய்வத்தையும் தெய்வமாகி விட்ட மானிடப் பெண் மல்லிகாவையும் அவன் அந்தரங்கம் கூவி அழைத்தது.

மல்லிகாவின் சிரிப்பு எங்கே போய்விட்டது ?

அவள் சிரிப்பு எங்கும் போய்விடவில்லை. ஆமாம், போய் விடவே இல்லே ! அவன் தன் இதயத்தைத் துழாவினான். அதோ, சிரித்துக்கொண்டிருக்கிறாளே மல்லிகா ! —— என்றும் மணக்கும் மல்லிகைப் பூவான பூவை மல்லிகாவிடம் சிரிப்புக்கா பஞ்சம் ? —— மங்கல மங்கையாக, மங்கள் செளபாக்கியங்களுடன் ‘போய்விட்ட’ மல்லிகா, மணக்கக் கேட்க வேண்டியதில்லைதான். “அத்தான், பூவும் பொட்டுமாக நான் போய்விடக் கொடுத்துவிட்டால் போதும்,” என்றாளே அவள் ! —— எதிர்காலத்தை உணர்ந்துதான் அப்படிப் பேசினாளா ? —— ஒருநாள் ஆனந்த் தியேட்டருக்குச் சிவஞானமும் மல்லிகாவும் ராஜாவும் படம் பார்க்கப் போய்த் திரும்பினார்கள். எம். ஜி. எம். படம். இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை. கதைக்குப் பாசமே——பிள்ளைப் பாசமே——கரு. கதையை அவ்வப்போது விளக்கினான் அவன். அவளுக்கு ஒருசில வசனங்கள் புரியவில்லை. அவன் விளக்கம் உதவியது. படம் முடிந்து, சுவாமி நாயக்கன் தெரு வீட்டிற்குச் சைக்கிள் ரிக்ஷாவில் வந்திறங்கிச் சாப்பிட்டார்கள். படுக்கைக்கு ஆயத்தப்பட்ட போது அவள் அப்படித் தெரிவித்தாள். ஏன் அவ்வாறு இயம்பினாள் அவள் ? விதிதான் அப்படிச் சொல்ல வைத்ததா அவளை ?

விதி ! ... விதியாவது மண்ணுங்கட்டியாவது ! ...

தெய்வம் ! ... தெய்வமாவது..... !