பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


ஈஸ்வரன்

ஸ்வரன் தோன்றிவிட்டார்!

சிவஞானம் நெஞ்சிடைச் சிலிர்த்தெழுந்த மனத்துடிப்பின் பல்வேறு உணர்வுக் கலவையுடன் தலையை நிமிர்த்துப் பார்த்தான்.

ஈஸ்வரனா அவன்?

'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி'த் திகழும் அந்த ஈஸ்வரனா ?

அல்ல, அல்லவே அல்ல!

இந்த ஈஸ்வரன் ஸில்க் ஜிப்பாவும் கிருதா மீசையுமாக ஆஜானுபாகுவாக விளங்கினார். வலது கையில் இருந்த காப்பிக்கொட்டைச் சங்கிலி கட்டாயம் ஐந்து பவுன் இருக்கக் கூடும். பெரும் புள்ளிதான் - உடலில் மட்டுமல்ல, பணத்திலும்தான் ! "கூப்பிட்டீங்களே, என்ன வேணும் ?” என்று கேட்டுக்கொண்டே கட்டிலில் அமர்ந்தபடி, குழந்தையையும் பார்வையிட்டார் அவர் - ஈ. ஸ் வ ர ன் - 'டுப்ளிகேட்'” ஈஸ்வரன் ! -

சிவஞானம் விரக்தியுடன் அம்மனிதரை ஊடுருவிப் பார்த்தான். "நான் ஒரிஜினல் ஈஸ்வரனை அழைச்சேன்!" என்று வேதனை அலை பாயத் தெரிவித்தான்.

"அப்படியா ?”... இப்போது அவரும் அவனை ஊடுருவி நோக்கினார். தெய்வம் இப்போதெல்லாம் மனித ரூபத்திலே தான் வருகிறதாகச் சொல்லுறாங்க நாலும் தெரிஞ்சவுங்க! ... ம்....சரி! குழந்தைகளும் நீங்களும்தானே இருக்கீங்க ?... எங்கே குழந்தையோட அம்மா ?” என்று கேள்வி விடுத்தார். ஈஸ்வரன்.

விட்டில் பூச்சிகள் ஒளி விளக்கைச் சுற்றிக்கொண்டிருந்தன. விளக்கைப் பழம் என்று நம்பின இனம் அவை!