பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கும்பிட்டான் அவளை. நீங்க நிஜமாகவே ஒரு தெய்வம்தான், அம்மா !” என்றான். பேச்சைத் தொடரமுடியவில்லை அவனால்'

"என்னாலான கடமையை என் பிறவிக் கடன் தீரச் செய்யத் துணிஞ்சேன்," என்று அடக்கமாகச் சொன்னாள் கலாவதி. தாலி புனர்ஜன்மம் எடுத்துப் புன்னகை காட்டியது. கழுத்துக் கொள்ளாத ஆபரணங்கள்! - அவளது வலது கை காமராஜின் இளமுடியைக் கோதிக்கொண்டிருந்தது.

"ஒரு பெருங்குடும்பத்தைக் காப்பாத்தின புண்ணியம் உங்களையே சேரும் !... உங்களுக்கு ஈஸ்வரனோடு இந்தத் தமிழ்ச் சமுதாயமும் ரொம்ப ரொம்பக் கடன்பட்டிருக்குதுங்க அம்மா !” என்றான் சிவஞானம்.

"ஊம்,” என்று பெருமூச்செறிந்தாள் கலாவதி. இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு வாய்தான் இருக்குது : இதயம் இல்லிங்களே? ... இதயம் இருந்திருந்தால், இம்மாதிரியான குடும்பங்கள் எத்தனே எத்தனையோ தலை தூக்கியிருக்கலாமே !...” என்றாள் வேதனையுடன்.

அவள் பேச்சு சிவஞானத்தைச் சிந்தனை வசப்படச் செய்தது.

அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்கவே, தன் குழவியை நோக்கினான் சிவஞானம்.

ராஜா நிம்மதியாகத் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். திரும்பினான் அவன். கலாவதியின் இடதுகை அணைப்பில் இருந்த 'பச்சை மண்'தான் அழுகுரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

கலாவதி குழந்தைகளுடன் புறப்பட்டாள். அழும் குழந்தைக்குப் பதில் சொல்ல வேண்டும் அவள்.

பாவம், சிவஞானத்தின் கதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாது!...

"கலா கொடுத்த தங்கம்தான் கைக்குழந்தை பெயர் அண்ணாத்துரை. அண்ணா மந்திரி சபை அமைச்சஅன்னைக்கு அவதரிச்சுது அது. நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன். ஆனாலும், உண்மையான தமிழ்த்தலைவர்களை நாளும் தொழுது பழகிவருகிறவன் நான்!" என்றார் ஈஸ்வரன்.