பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


ஒரு நரகம்

‘மித்திரன்’ காற்றில் ஊசலாடியது.

சிவஞானத்தின் மனத்தீர்ப்புக்காக எத்துணை நேரமாகத் தவம் இருக்கின்றாள் அவனது மல்லிகா !

ஊசலாடிய மனத்தை அழுந்தப் பற்றிக்கொண்டு, பற்றுக் கடந்த துறவி போல வாயைச் சுட்டுவிட்ட சிகரெட்டின் துணுக்கை துணுக்குற்ற துடிப்புடன் வீசி எறிந்தான். எரிந்த துண்டு புகைந்தது. உன் மனப்புகை அவ்வாறு புகைந்ததாகவே அவன் உணர்ந்தான். உதட்டின் உட்புறத்தில் ஒட்டியிருந்த சிகரெட்டுப் புகைத்துகளைத் துப்பினான், சிவஞானம்.

ஈஸ்வரன் அவன் நெஞ்சத்தில் தோன்றினர். வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசிய அவரது சொற்கள் அவன் மனத்தில் எதிரொலிக்கத் துவங்கின. "ராஜாவைக் காப்பாத்திடுங்க. அதுக்கு இன்னொரு அன்புத்தாயைக் கொடுங்க!.... இது ரொம்ப முக்கியம் ! உங்களை நீங்க மறந்திடலாம் ; ஆனால், நீங்க உங்க குழந்தையை - உங்க அருமைச் சம்சாரத்தின் நினைவுப் பரிசை மறந்திடாதீங்க ... அப்பாலே உங்க இஷ்டம்...'

அவர் பேச்சு அவன் உள்ளத்தை - உள்ளத்தின் உள்ளத்தைத் துண்டில் புழுவாகத் துடிக்கச் செய்தது. அதே தருணத்தில், ரிக்க்ஷாக்காரன் ராமையாவும் அவனுள் வழக்கம் போல ஆலவட்டம் சுற்றத் தொடங்கினான். "உங்க ராஜாவை: நீங்க ஒண்டியுமாய் வளர்க்கவே முடியாதுங்க. வேறே ஆயாளாலேயும் காப்பாத்த முடியாது. ஆனபடியாலே, அதுக்கு ஒரு இரண்டாவது அம்மாவை நியமனம் செஞ்சிடுங்க. இது தான் உங்களோட அதிமுக்கியமான கடமை !...” என்று