பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

விஜயா தோன்றிய நெஞ்சில் மல்லிகா தோன்றிச் சிரித்தாள்!

"மல்லி!..."

குழந்தை படுத்திருந்த இடத்தில் :ஈரம் இருந்தது. ஈரம் பட்டு நாழிகை கூடுதலாக ஆகியிருக்குமோ என்று மனம் புழுங்கினான் சிவஞானம். அவசரமாகப் பையைப் பிரித்துத் துணிக் கிழிசலை எடுத்து, குழந்தையின் இடுப்பில் செருகினான். தயாரக வைத்திருந்த பால் சீசாவை, ரப்பரை, துடைத்துவிட்டு, ராஜாவின் வாயருகில் கொண்டுபோனான். பிறகு, மறுமுறையும் ரப்பரைத் துடைத்துவிட்டு, விரல் பதமாகச் சூடு இருப்பதை அறிந்த நிம்மதியுடன் சீசாவை குழவியின் இதழ்களிடைப் பொருத்தினான். ஆவலுடன் குடிக்கத் தொடங்கியது குழந்தை. 'கிரைப் வாட்டர்' புகட்ட வேண்டும். அப்புறம், புதுப்பால் வாங்கிக் காய்ச்சித் தரச் சொல்லி, பிளாஸ்கில் அடைத்துக் கொள்ள வேண்டும். ரயிலுக்குப் புறப்படு முன் ஒரு முறை சொட்டு மருந்து கொடுத்தால் போதும்! - பட்டியலின் கடமை நீண்டது. நீண்டு கிடக்கும் கடமைப் பட்டியல் அவனே அச்ச மூட்டியது. ராஜாவுக்கு இரண்டாவது அன்னை நியமிக்கப்படும் வரை இடையிலுள்ள நாட்களை அவன் எங்ஙனம் கழிப்பான் ? ஒவ்வொரு வினாடியும் அவனுக்கு ஒவ்வொரு யுகம் ஆயிற்றே!

"மல்லிகா, நீ ஏன் எங்களை விட்டுப் பிரிந்தாய்? ' எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே ?...”

அவன் விம்மினான்!...

சிரிப்பதற்குத்தான் வாழ்க்கை என்று விஜயா போதித்தாள்.

இவனோ விம்முகிறான் !...

வாழ்க்கை சிரிப்பதற்குத்தானா?

வாழ்க்கையில் அழுகைக்கும் பங்கு இல்லையா ? - பங்கு வேண்டாமா ?

வெறும் சிரிப்பு மட்டுமே வாழ்க்கையின் நிலைக்களனா அமைந்துவிட முடியுமா ? - இல்லை, துயரத்திலும் சிரிக்கப் பழக வேண்டுமென்கிறார்களே, அப்படித்தான ?

எது பொய் ?