பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


ராஜாத்தெய்வம் !

“அத்தான்! என்னோட இந்த மண் வாழ்க்கை இன்னம் கொஞ்சப் பொழுதுக்குத்தான் !... அதுக்குள்ளே உங்ககிட்டே ஒரு வரம் வாங்கிக்கிட ஆசைப்படுறேனுங்க, அத்தான் ! நீங்க என்னை எவ்வளவோ சந்தோஷமாய் வச்சுக் காப்பாத்தினீங்க.. நாம் வாழ்ந்தது கொஞ்ச காலம்தான் என்றாலும்,எனக்குப் பல நூறு வருஷம் உங்களோடே வாழ்ந்ததாகவே ஒரு திருப்தி மனப்பூர்வமாய் உண்டாகுது. ஆன, விதி நம்மளைத் திசை பிரிக்கச் சதி செஞ்சுக்கிட்டிருக்குது. நான் என் ராஜாவுக்கு - நம்ம ராஜாவுக்கு அம் மாவாக இனியும் இருக்க முடியாதின்னு என் மனசுக்குத் திடமாய்த் தோணிடுச்சு. ஒரு வரம் தரவேணும் நீங்க !... என்றைக்குமே நீங்க என்னை மறக்க மாட்டீங்க என்கிறதை நான் சத்தியமாய் மறக்கவே மாட்டேன். அதே வாக்கை நீங்க மனசொப்பிக் கட்டிக் காத்துக்கிடவும் செய்வீங்க. உங்க மனசு எனக்குத் தெரியும். உங்க மனோ தர்மத்தை - திடத்தை - வைராக்கியத்தைப் புரிஞ்சவ நான் ! - ஆனா, நம்ம ராஜாவுக்கு - என் ராஜாவுக்கு ஒரு அம்மா வேணுமே!... அதுக்கு ஒரு இரண்டாவது தாயைக் கொடுங்க ! ... அவனுக்கு இரண்டாம் அம்மாவாக வரப்போற புண்ணியவதியைச் சோதிச்சுப் பார்த்து, அவளுக்கு அந்தப் புனிதப் பதவியை - பாசப் பொறுப்பைக் கொடுங்க! நீங்க என்னை எப்படி மறப்பீங்க ?- எனக்கு நீங்க திருப்பூட்டினவுடனேயே நான்தான் என் உயிரை உங்க உயிரோடே இரண்டறக் கலக்கச் செஞ்சிட்டேனே!.."

மரணப் படுக்கையில் ஊசலாடிய தன் இன்னுயிர் மனையாட்டி மல்லிகா, தன்னிடம் வரம் கோரிய சம்பவம்