பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சிவஞானம் ஓடாமல் நிலைத்து நின்றான் , நெடுமரமாக நிலைத்துநின்றான்.

ராமையாவும் சராசரி மனிதன்தான் !... சுயநல நோய்க்கு அவனும் விதி விலக்காகிவிடவில்லைதான். அவன் ஊரைப் போல, உலகத்தைப் போல சாதாரண ராமையாதான் !...-- சிவஞானத்தின் இதயத்தில் ராமையாவைப்பற்றி எழுந்து புகைந்துகொண்டிருந்த வினாவுக்கு விடை கிடைத்துவிட்டது.

அவனுக்கு மண்டை வலித்தது. 'விக்ஸ்' டப்பாவிலிருந்து, நகக்கண் கொண்டு, துளி வழித்து நெற்றிப்பொட்டுக்களிலே தடவிக்கொண்டான். இந்தப் பணியைச் செய்வதில் மல்லிகா மகா கெட்டிக்காரி! ... மல்லிகா!...' மை டியர் மல்லிகா! ... ' குழந்தை ராஜாவை வாரி எடுத்தான்.

அவன் களையுடன் முறுவலித்தான்.

அம்மா இரண்டாம் தடவையாகக் கிடைக்கப் போகிறாள் ...ராஜாவுக்கு ! சிரிக்கட்டும், சிரிக்கட்டும் ! தீர்க்காயுளோடு சிரிக்கட்டும் !

குழந்தையை மார்புடன் அணைத்தவனாக, எச்சரிக்கையுடன் தரையில் குந்தினான் சிவஞானம். குழந்தையின் கழுத்தில் நிமிண்டினான்.

குழந்தை பலமாகச் சிரித்தது. அதன் பஞ்சுப்பாதங்களின் உட்புறங்களை மெள்ளச் சுரண்டினான்.

மீண்டும் பொக்கை வாயைப் பிளந்துகொண்டு சிரித்தது. கன்னக்கதுப்புக்கள் குழிந்தன.

சிவஞானம் 'கிரைப் வாட்டர்' சீசாவை எட்டி எடுத்தான். பாலடையை நகர்த்திக்கொண்டான். மயிர் மண்டியிருந்த முகத்தைத் தடவியபடி, குழந்தையை இடது கைப்பிடியில் தாங்கி அணைத்துக்கொண்டான். வலது கையால் பாலடையை நகர்த்தி, அதில் 'கிரைப் வாட்டர்' மருந்தை ஊற்றிப் பாலடை முனையை ராஜாவின் இதழ்களில் செலுத்தினான். சிரித்துக் கொண்டிருந்த பாலகன் குபீரென்று வீரிடத் தொடங்கினான். முக்கி அழுத காரணத்தினால் மலம் கழிந்தது. அவன் வேட்டி, நாறிவிட்டது. அதைப்பற்றி அவனுக்குக் கவலை இல்லை. அவன் கவலையெல்லாம் பிள்ளைக்கு ஒழுங்காக மருந்து