பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சொன்ன சொற்கள் அவனுள் எதிரொலித்தன. ஈஸ்வரனின் பெருங்குடும்பத்தை தர்மத்தின் பெயரால் தலைதுாக்கச் செய்யத் தன்னையே தியாகம் செய்யத் துணிந்த அந்த விதவையின் முடிவையும் ஏனோ அப்பொழுது எண்ணிக்கொண்டான் !...

அதோ விஜயா திரும்பிவிட்டாள் ! வசந்தியுடன் உடன் தொடர்ந்து வந்தாள் !

“அத்தான், என் தோழி குமாரி வசந்தி ஒரு சமூக சேவகி. அனாதை. அவளை உங்ககிட்டே அடைக்கலம் வைக்க ஆசைப்படுகிறேன் !...” என்று நேரிடையாகப் பேசினாள் விஜயா.

சிவஞானம் மேனி புல்லரிக்கத் தலையை நிமிர்த்தினான்.

குழந்தை ‘கம்’மென்றிருந்தது !...

“விஜயா ! வாழ்க்கை சிரிக்கிறதுக்காகத்தான்னு நீ ஒரு தடவை என்கிட்டே சொன்னாய். நானும் நம்பினேன். ஆனா, நம்ம இரண்டு பேர் வாழ்க்கையும் அழுகிறதுக்கின்னு ஆயிட்டுது!... விஜயா!... கரைமணலும் காகித ஒடமும் பார்க்கிறதுக்குத்தான் ரம்மியமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். கடல் அலை வந்திடுச்சின்னா கரைமணலோட அழகு சீர்குலைஞ்சிடும்; காகித ஓடம் கடல் அலையிலே அடிபட்டுச் சின்னபின்னமாகிடும்! ... காகித ஓடத்தையும் கரைமணலையும் கடல் அலை வர்றதுக்குள்ளே பார்த்து ஆனந்தப்பட்டு மனசு நிறையிறதுதான் விவேகம். அது போலத்தான் இந்தப் பூலோக வாழ்க்கை !... அந்த இடைவேளையிலே நாம் சிரிச்ச வரை மிச்ச லாபம் ! இப்போ நம்மை விதி என்கிற கடல் அலை கதிகலங்கச் செஞ்சிட்டுது !... கரை மணலின் நளினமும் காகித ஒடத்தின் கம்பீரமும் நம்ம வரை கனாப் போல ஆயிடுச்சு. நீ கணவனை இழந்து நிற்கிறே! நான் மனைவியைப் பறி கொடுத்து நிற்கிறேன் !... இப்படிப்பட்ட பயங்கரக் கட்டத்திலே நாம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கோம். இந்த நிலைமையிலே உன் கவலையை மறந்து, நீ எனக்கு ஒரு உபகாரம் செய்ய முன் வந்திருக்கே !... உனக்கு ஏற்கெனவே கடன்பட்டவன் நான் !... இப்போது நீ காட்டுற பரிவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன் !...