பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

“விஜயா ! என்னைப் பெரிய மனசு பண்ணி தயவு செஞ்சு மன்னிச்சுப்பிடு நீ !.... அம்மா வசந்தி, உன் பெருந்தன்மையை என் ஆயுள் மறக்கவே மறக்காது !... விஜயா ... நான் என்னோட முடிவை உன்கிட்டே சொன்னேனே, அதைச் சரிவர காதிலே வாங்கிக்கலேயா ? என் ராஜாவுக்கு ஒரு இரண்டாவது அம்மா வேணும் ! ! அவ்வளவுதான் பிரச்னை !... ” என்று விநயமான விரக்திச் சிரிப்புடன் மொழிந்தான் சிவஞானம். நடுங்கிக்கொண்டிருந்த அவன் கரங்கள் அவன் ‘இலட்சிய’த்தை வருடிக் களித்துக்கொண்டிருந்தன ! புதுச் சொக்காய் வெகு நேர்த்தி !...

விஜயா அவனை ஊடுருவிப் பார்த்தாள். அவள் பார்வையில் புதிய துடிப்பு முடிவிட்டிருந்தது, இப்போது, அள்ளிச் செருகப்பட்டிருந்த முடியின் இழைகளை ஒதுக்கினாள்.

சிவஞானம் பொறிதட்டித் தவித்தான்.

“அத்தான் !”

“விஜயா !...”

“உங்க ராஜாவுக்கு இரண்டாவது அம்மாவாக இருக்க நான் தயாருங்க !... என்ன சொல்றீங்க நீங்க ?...”

“விஜயா ...” -

“ஆமாங்க, அண்ணா !...”

“விஜயா !...”

விஜயாவின் தெய்வமணிக் கரங்களை - வெறிச்சோடிக் கிடந்த அந்தப் பூங்கரங்களைப் பாசத்துடன் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டு தேம்பினான் சிவஞானம் “என் தெய்வம் மல்லிகாவின் வரம் பூர்த்தியாயிடுச்சு !... என் ராஜா கொடுத்து வச்சவன் !... அவனுக்கு தெய்வமே வந்து இரண்டாவது அம்மாவாக அமைஞ்சிடுச்சு !... ஆஹா !... ஆண்டவனே, உன் கருணையே கருணை !...” என்று மெய்ம்மறந்து கூறினான் சிவஞானம்.

ராஜா “ம்....மா!...அ...ம்...மா !” என்று கூப்பிட்டபடி, தன் தந்தையின் மடியிலிருந்து விஜயாவின் மடிக்குத் தாவினான்! தாவியதும் விஜயாவின் மார்பகத்தைத் துழாவ முனைந்தான் : விஜயா கெட்டிக்காரி. பரிவுடன், கண் கலங்க, பாலூட்டும்