உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சீசாவை குழந்தையின் கனி இதழ்களில் செருகிப் பொருத்தி விட்டாள் ! குழந்தை பாலமுதம் உண்டது !

இவ்வளவு களைமிக்க அற்புதச் சிரிப்பையெல்லாம் ராஜா இந்த முப்பது நாட்கள் எங்கேதான் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தானோ?....

சிவஞானம் புதிய தெளிவுடன் தலை நிமிர்ந்து நின்றான். முகத்தைத் துடைத்துக்கொண்டான். முடி இழைகள் குத்திட்டு நின்றன. புதிய புன்னகை அவனது வெளுத்துக்கிடந்த உதடுகளில் புதிய தெளிவுடன் விளையாடத் தொடங்கியது : “மல்லி... ! ....மை டியர் மல்லிகா ! கண்ணே மல்லி !... இனி வழக்கம் போல நீதான் என் உலகம் !... எஸ்....இன்டீட், மல்லிகா !...

கதைப் புத்தகங்கள் குவிந்தன !சிகரெட்டுகள் விரிந்தன!

ராமையா சராசரி மனிதனாக மலைத்துப் போய் நின்று விட்டான்!... அதிசயப் பொருளைப் பார்ப்பது போல, சிவஞானத்தை அவன் பார்த்தான் !...

அன்றிரவு ‘போட் மெயி’லில், முதல் வகுப்புப் பெட்டியின் ஒரு முனையிலே, சிவஞானம் அமைதியுடன் நித்திரை வசப்பட்டிருந்தான் !

எதிர்முனையில், விஜயாவின் பாசம் செறிந்த இன்ப அரவணைப்பிலே குழந்தை ராஜா நிம்மதியுடன் கண்வளர்ந்து கொண்டிருந்தான் !... ‘கோயா’ பவுடர் அற்புதமாக மணம் பரப்பிக்கொண்டிருந்தது. பாலூட்டும் சீசா தயாராகக் காத்துக் கொண்டேயிருந்தது!...

சொக்க வெள்ளிப் பாற்குடம் விண்ணிடைத் தவழ்ந்து உருண்ட அழகை உணர்ந்து, அமைதி பெறவேண்டி, கண் விழித்துக் கொண்டிருந்தது ஒரேயொரு ஜீவன் மட்டுந்தான் ! ஆமாம், அவள் ஒருத்திதான் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள் !

அவள் யார் தெரியுமல்லவா ?

அவள்தான் விஜயா !...

—— ——