பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வசந்தம் திரும்பி வரும்!

1


ஞானபண்டிதன்

சோக மரங்களின் பசுந்தளிர்களிலே செஞ்சுடர்ச் செல்வனின் இளம் பொற்கிரணங்கள் பிரதிபலித்துக்கொண்டிருந்தன.

இரு பக்கங்களிலும் காவலாகவும் துணையாகவும் நின்று கொண்டிருந்த அம்மரங்களுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த அந்தப் பங்களா, இளங்காலைப் பொழுதில் கம்பீரமான அழகுடன் விளங்கிக்கொண்டிருந்தது. கட்டடத்தின் அடிப்பகுதியில் கிளிப்பச்சை நிறமும் அதற்கு மேலே மெல்லிய ஊதா நிறமும் பொலிந்தன ; மாறுபட்ட அவ்விரு வண்ணங்களின் கூட்டுறவில் அந்தப் பங்களா, ஆரோக்கியமான ஒர் எழிலும், அமைதியான ஒர் ஆனந்தமும் பூண்டு திகழ்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

அந்தப் பங்களாவின் மாடியிலிருந்த ஹாலின் கீழ் மூலை வட்டத்தில், காண்பவர்களது மனங்களைக் கவரும் ‘செஸ்ட்னர்’ கடிகாரம் நிதானமாக ஏழுமுறை ஒலித்தது: ஓய்ந்தது.

அந்த ஒர் ஓசையின் நுணுக்கமான ஒலியலைகளின் அமைதிக்குப் பிறகு, மெத்தையை விட்டு எழுந்தார் சோமசேகர். எழுந்ததும், கைகள் இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்துத் தேய்த்து உள்ளங்கைகளைப் பார்த்தார்.