பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


சிவஞானம். வேஷ்டியை இழுத்துச் செம்மைப்படுத்திக் கொண்டேன் அவன்.

கவனம் அவனுடன் இறங்கியது ; ஆனால் சுமை - மனச்சுமை அவனை விட்டு இறங்கவில்லை. என்றாலும், மனப்பளுவின் சலனத்தை ஒருநிலைப்படுத்தி ஆண்ட நிலைமையுடன் இறங்கிய அவன், தன் தோளில் சாய்த்து அனைத்திருந்த தன் குழந்தையை, வைரக் குவியலைப் பாதுக்காப்பதைப் போல, அத்துனை கண்காணிப்புடன் காத்தவண்ணம், அக்கவலையே தனக்கு விதித்த கட்டளை போன்று மனம் நெகிழ்ந்து, அந்நெகிழ்ச்சியின் புயல்கடந்த அமைதியுடன் மீண்டும் அம்மாளிகையை ஏறிட்டு விழித்துப் பார்த்துவிட்டு அப்படியே சிந்தனைக்குள்ளாகி நின்றான்.

குழந்தை அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தது. பட்டு மேனிக்கு அந்தப் பட்டுச்சொக்காய் மிகவும் பொருத்தம் காட்டியது.

இடது தோளில் தொங்கிக்கொண்டிருந்த பர்மாப் பையில் இருந்த பாலூட்டும் சீசா, தன் முதுகின் கீழ்ப்பகுதியை உரசிக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். மறுபடியும், அவன் இதயம் உச்சிக்கு ஏறி, பாதாளத்துக்கு இறங்கியது.

"இந்தாங்க ஸார், பெட்டி,” என்றான் ரிக்ஷாக்காரன்.

"ஒ... ரொம்ப நன்றியப்பா !”

சிவஞானத்தின் வலது கைப்பிடிப்பில் தோல் பெட்டி ஏறியது.

தராசின் ஒரு தட்டில் படிக்கற்கள் ஏறும் பொழுது மற்றத்தட்டு அதற்குரிய பளுவின்றி 'சடக் என்று தாழ்ந்துவிடுமே, அப்படிப்பட்ட நிலையிலே, அவனுடைய இடது கைப்பிடிப்பின் அணைப்பில் தேங்கியிருந்த குழந்தை தடுமாறியது. நல்ல வேளையாக, அவன் நிதானமும் கவனமும் கவலையும் அவனைக் கைவிட்டுவிடாமல் காத்தருளின. 'பகவானே !’ என்று வெளிப்படையாக உணர்ச்சிவசப்பட்டுக் கூறிக்கொண்டான் அவன். அவ்வாறு அவன் கூறிக்கொண்டது, தன்னுடைய உள்ளார்ந்த மன ஆறுதலையும் பூர்த்திசெய்ததுடன், அவனது மனப்புறத்தையும்-புறமனத்தையும் தேற்றிவிட்டது.