பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

‘பகவானே !’ என்று அவரது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டன. போர்வையை உதறிவிட்டு எழுந்தார். மாடியின் ஆளோடித் தாழ்வாரக் கைப்பிடியைப் பிடித்தவராக, தூரத்துப் பார்வையைச் செலுத்தினார். திட்டுத்திட்டான மலைப்பகுதிகளும் பசும் புல்வெளித் திடல்களும் மரக்காடுகளின் கூட்டங்களும் அவரது பார்வையை ‘நிரந்து’ கொண்டிருக்க வேண்டும். இயற்கையின் சுவைப்பில் அவர் மனம் மதலை ஆனது.

பல்லாவரத்தை ஒதுக்கிவிட்டு, மின்சார ரெயில் ஒடிக் கொண்டிருந்த சத்தம், தொலை தூரத்திலிருந்து மிதந்து வரும் வீணையின் சுநாதமாக ஒலித்தது.

சோமசேகர் ஒர் அரைக்கணம் தம் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டார். ஏதோ ஒன்றை — அல்லது ஒரு நிகழ்வை எண்ணி—அழுத்தமுடன் எண்ணி அமைதி காத்தவராக அவர் போக்கும் பாவனையும் தோன்றின. இணைந்திருந்த விழி இணைகள் இன்னமும் மோனநிலையினை விலக்கவில்லை : விலக்க முடியவில்லை. சிறு பொழுது கழிந்தது. அவர் தம்முடைய கண்களை மெள்ளத் திறந்தார். நினைத்த ஒன்றை எப்போதுமே நினைவிற்கொள்ளக் கடமை கொண்டவர் மாதிரி அவர் முகபாவம், இருந்தது ; விழிகளை மூடி மூடித் திறந்தார். இமை வரம்புகளில் நீர் முத்துக்கள் வரம்பு கட்டி நின்றன.

“ஞானபண்டிதன் !... ” ஒரு முறை இந்தப் பெயரை அவர் தமக்குத்தாமே உச்சரித்துக் கொண்டார். அவருடைய உதடுகளின் ஓரங்கள் புன்னகையைக் கூட்டலாயின. அவர் விசுக்கென்று திரும்பினார். ஸ்டூலில் இருந்த காப்பிக்கோப்பையை எடுத்தார். அதைச் சுமந்தபடி, பேஸினை அடைந்து, குழாயைத் திருகி, வாயைக் கொப்பளித்து முடித்து, காப்பியையும் குடித்து முடித்தார்; பிறகு, கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே சிகரெட்டைக் கொளுத்தினார். புகையை உறிஞ்சி உறிஞ்சி உமிழ்ந்தார்.

அப்போது ரேடியோவில் செய்திகள் வாசிக்கப்பட்டன : பாகிஸ்தானின் துராசைக்கு நல்ல பாடம் கற்பித்துக்கொடுத்த நம் வீரர்களின் திறனையும் நாட்டுப்பற்றையும் பாராட்டி