உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

அவர்கள் அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துப் பேசிய பாரதப் பிரதமரின் பேச்சுக்கள் நினைவூட்டப்பட்டிருந்தன !...

சோமசேகர் மாடிப்படிகளைக் கடக்க முனைந்தார். ‘எஸ்... எட்டு மணிக்கு பிளேன் வந்திடும்...ஞானபண்டிதனை—என் ஞானபண்டிதனை - இன்னும் அரை மணிக்குள் சந்தித்துவிட முடியும். அப்பப்பா !... எத்தனை பெரிய இடைவெளி !...ஐந்து நீண்ட பெரும் ஆண்டுகளல்லவா ஒடிவிட்டன, அவன் அமெரிக்காவுக்குத் தொழில் நுட்பப்படிப்புப் படிக்கப் போய் !... ஊம் !" என்று அவர் உள்ளூற நினைத்தார் : மகிழ்ந்தார்.

சோமசேகர் குளித்தார் ; புது உடைகள் அணிந்தார். வெளிறிய லெனின் தாடியையும் நரை மீசையையும் வருடி விட்டவண்ணம், நிலைக்கண்ணாடியின் முன்பாக வந்து நின்றார். சீப்பை எடுத்துத் தலைமுடியை வாரிக்கொண்டார். விபூதிமடலை அண்டி, ஒரு துளி எடுத்து நெற்றியில் அணிந்தார். ஒரே சந்திப்பாகக் கூடியிருந்த தெய்வங்களுக்கு ஒருசேர வந்தனை செலுத்தினார்.

அப்புறம், அவர் மேற்புறச் சுவர்ப்பக்கமாக விசையுடன் நகர்ந்தார்.

அண்ணல் காந்தியின் பெரிய ஓவியம் மாட்டப்பட்டிருந்த இடத்திற்கு சோமசேகர் நெருங்கிய போது, மாடிப்படிகளைக் கடந்து வந்த காலடி ஓசையை அவர் கவனிக்கத் தவறவில்லை.

திரும்பினார்.

“ஐயாவுக்கு டிபன் இருக்குதுங்க!” என்றான் வேலப்பன். இருபது ஆண்டின் அனுபவப் பாசம் நன்றியாய்க் கனிந்ததே !...

“இருக்கட்டும், வேலப்பா ! நீ போ!... நான் கீழே வரும் போது காப்பி சாப்பிட்டுக்கொள்கிறேன் !” என்றார் பெரியவர் சோமசேகர்.

வேலப்பன் போய்விட்டான்.