பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


கீழ்த்தளத்தின் தலைப்பில் தொங்கிய தன்னுடைய பெரிய புகைப்படத்தைப் பார்த்த போது, அவனையும் அறியாமல் ஒரு வகைப்பட்ட பெருமிதம் ஊறியது. ‘என்பால் என் தந்தை கொண்டுள்ள பாசத்துக்கு ஏது அளவு?’ என்று சிந்தித்தான் அவன்.

டீ பரிமாறுவதற்கான திட்டங்களைச் செப்பினார் அவர்.

ஹாலில் அலங்காரமாகப் போடப்பட்டிருந்தன ஆசனங்கள். அவற்றின்மீது பட்டு விரிப்புக்கள் போர்த்தி விரிக்கப் பட்டிருந்தன.

அவற்றை மேற்பார்வையிட்டவண்ணம் ஏதோ சிந்தனை செய்தபடி நின்றார் சோமசேகர். அன்றிரவில் அவர் சரியாகத் தூங்கவில்லை. ஆகையால், கண் வளையங்களில் லேசான வலி மிதந்தது. ‘இராத்திரி எத்தனை பயங்கரமான கனவு வந்து விட்டது ! சே!’ என்ற அச்சம் அவரைப் பிடர் பிடித்துக் குலுக்கிவிட்டது.

சுற்றி வந்தான் ஞானபண்டிதன்.

தயங்கித் தயங்கி வந்தான் வேலைக்கார வேலப்பன்.

அவனை ஒரு முறை ஆழமாகப் பார்த்தார் ஞானபண்டிதன். "யார், நீங்க வேலப்பன்தானே ஐயா?” என்று பவ்யமாகவும் மரியாதைத் தொனியுடனும் விசாரித்தான் அவன்.

வேலப்பனுக்கு உச்சி குளிர்ந்தது. நன்றிக் கண்ணிர் சுரந்தது. “ஆமாங்க, சின்ன எஜமான் !... உங்களைத் தோளிலே போட்டு வளர்த்த அதே ஏழைதானுங்க ! எங்கே என்னை மறந்துப்புட்டீங்களோன்னுதான் நான் மறுகித் துவண்டுகிட்டிருந்தேன், இம்புட்டு நேரமாய் இந்த ஏழைக்குப் போன உசிரு திரும்பியிருச்சுதுங்க தம்பி !” என்றான் அவன்.

“முதலிலே பார்த்ததும் எனக்குச் சரியாய் மட்டுப்படலே. அவ்வளவுதான். உங்களை மறக்கிறதும், நன்றியை மறக்கிறதும் ஒண்னு தான். !... நீங்க தெம்பாயிருங்க !” என்று சொல்லி அவரது வசதிகள் பற்றிப் பரிவுடன் விசாரித்தான்.

“பெரியவுக இருக்கிறப்ப, எனக்கு என்னாங்க குறை ? நானும் ஒண்டிக்கட்டை! எனக்கு இங்கே தந்திருக்கிற வசதிகளே எதேஷ்டம்! ஆமாங்க, தம்பி !" என்றான் வேலப்பன்.

க. ம. — 6