பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

ஆமா, சொல்லிப்பிட்டேன்”!... என்று முழங்கினான் அந்த முரடன்.

“அதெல்லாம் பகற்கனவு !” என்று காறி உமிழ்ந்தாள் அந்தப் பெண்- பூவழகி!

“இந்தச் செங்கோடன் கிட்ட சம்பிராயம் போட்டு யாருமே இது பரியந்தம் கெலிச்சது இல்லே! நீ கன்னிப்பொண்ணு என்றதுக்காக நான் பொறுமையாய் இருக்கேன். சரி, நீ இங்கேயே கிட!” என்று சொல்லிவிட்டு, அந்த அறையின் கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டான் செங்கோடன். தொடர்ந்தான் பணக்காரன்.

ஞானபண்டிதன் அவர்கள் பார்வையில் விழவில்லை.

ஆனால், கம்பத்திலிருந்து நழுவி விழுந்துவிட்டான். இருந்தாலும், மறுபடியும் கம்பத்தைச் சார்ந்து, மேலே ஏறினான். சுவரின் துவாரம் வழியாக, அக்கன்னிமலரை நன்றாகப் பார்த்தான். துணிவும் துடிப்பும் தூய்மையும் மிளிர அவள் நின்றாள். அருகில் சாப்பாடு இருந்தது. அதை எட்டி உதைத்தாள் அவள்.

பூவழகியைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் அவன் சிறு பொழுது சிந்தனை வசப்பட்டான். அவன் மறுபடியும் கயஞாபகம் கொண்டு விழித்த போது, சிவப்புத் தொப்பிகள் சில தென்பட்டன. உடனே, கெட்டிக்காரத்தனமாக இறங்கிவிட்டான் ஞானபண்டிதன்.

அப்போதைக்குக் காரை எடுத்துக்கொண்டு புறப்படுவதைத் தவிர வேறு உபாயம் எதுவும் அவனுக்குத் தோன்றினால்தானே ?...