பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


செந்தில் விலாசம்

ஞானபண்டிதன் பங்களாவை அடைந்தான். ‘செந்தில் விலாசம்’ என்ற பெயர் அமைப்பில், அந்தம் கூட்டி எரிந்த நீலப் பாதரசக் குழல் விளக்கு அவனுக்கு நிரம்பவும் பிடித்திருந்தது. அதைப் போலவேதான், அந்தச் ‘செந்தில் விலாசம்’ என்ற பெயரும் அவனுக்கு அமைதி காட்டியது. ஆனால், ‘செந்தில் விலாசம்’ என்ற அப்பெயர், எந்த அடிப்படையில் சூட்டப்பட்டிருக்குமென்பது அவனுக்குப் புரியாத புதிராகவே தோன்றியது. ‘இதைப்பற்றி இப்போதென்ன வந்தது?’ என்ற நினைவு அவன் பிரச்சனையை ஒதுக்கியது. அவன் காரை ‘போர்டிகோ’வில் ஒதுக்கிவிட்டு உள்ளே பாய்ந்தான்.

நடுக்கூடத்தில் அவன் அடியெடுத்து வைத்தான்.

அங்கே அவன் தந்தை குஷன் சோபாவில் சாய்ந்திருந்தார். அவரது முகவிலாசம் சோம்பிச் சுருங்கிப் போயிருந்தது.

அவருக்குப் பக்கத்தில் யாரோ ஒரு நபர் மரியாதையுடன் கைகட்டி நின்றார்.

“அப்பா, உங்களுக்கு உடம்புக்குச் சரியில்லேயா, என்ன ?” என்று தடுமாற்றத்தோடு வினவினன் அவன்.

“ஒன்றுமில்லை தம்பி. நெஞ்சு வலிச்சது. இப்போது சரியாகிவிட்டது. டாக்டர் நாகபூஷணம் வந்துவிட்டு இப்போது தான் போனார் !”

அவர் பதில் அவனுக்குச் சாந்தி நல்கியது.

“இந்த ஆள் பர்மா அகதியாம். பெயர், சித்தரஞ்சனாம். பெரிய குடும்பமாம்!” என்று முன்னுரை சொன்னார் சோமசேகர்.

அவன் அனுதாபப்பட்டான்.

“பர்மாவிலே எந்தப் பகுதியிலே வேலை பார்த்தீங்க ?”

“மரண்டலேயிலே !”