பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


நூலைப் படிக்கும்பொழுது நாமும் உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூரிக்கின்றோம் ; மகிழ்வடைகின்றோம். எல்லாவிதச் சுவைகளும் நம் உள்ளத்தைக் கனிவு பெறச் செய்கின்றன என்றே சொல்ல வேண்டும். நூலிலுள்ள சுவைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.

உவகைச்சுவை

சுவை நூலார் உவகையை முதல் சுவையாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். தமிழ் இலக்கியங்களில் காதல் சுவை உயர்ந்த பீடத்தைப் பெற்றிருக்கின்றது. காதலையே ஒரு உயர்ந்த கலைபோல் வளர்த்திருக்கின்றனர். இவ்வாறு இலக்கியங்களில் வரும் காதற் சுவையை அனுபவிக்க உள்ளத் தூய்மையும் சுவைக்கும் பழக்கமும் வேண்டும். அவை இரண்டும் இல்லாதவர்கள் கற்பனை உலகில் காணும் இன்பக் கனவுகளாகின்ற வருணனைகளை யதார்த்த உலக நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு நம் இலக்கியங்களைக் குறை கூறுகின்றனர். உவகைச் சுவையை இலக்கண நூலார் களவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் அடக்கிக் காட்டுவர். இரண்டிலும் எண்ணற்றதுறைகள் உள்ளன. இவ்விரண்டு பிரிவுகளிலும் உள்ள செய்திகளையே வடமொழிவாணர்கள் விப்ரலம்ப சிருங்காரம், சம்போக சிருங்காரம் என்று பாகுபாடு செய்து காட்டுவர். அவையே இவை என்று சொல்ல இயலாவிடினும் அவற்றிலுள்ள செய்திகளே இவற்றிலும் வருகின்றன என்று கூறிவிடலாம்.

போரைப்பற்றிய கலிங்கத்துப் பரணியிலும் உவகைச்சுவை இடம் பெற்றிருப்பதிலிருந்தே அச்