பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவைகளின் களஞ்சியம்

101


சுவையின் உயர்வை அறியலாம். நூலிலுள்ள 'கடைதிறப்பில்' இச்சுவை பல்வேறு கோணத்தில் சித்திரிக்கப் பெறுகின்றது. ஒரு சிலவற்றை முன்னர்க் கண்டோம். ஈண்டும் சிலவற்றைக் காண்போம்.

போரில் புண்பட்ட வீரர்களுக்கு வீட்டில் மருத்துவம் தரப் பெறுகின்றது. அப்புண்களுக்கு அவ் வீரர்களின் துணைவியரே சிகிச்சை தருகின்றனர். இதைக் கவிஞர்,

தங்குகண் வேல்செய்த புண்களைத்
தடமுலை வேதுகொண்டு ஒற்றியும்
செங்கனி வாய்மருந்து ஊட்டுவீர்!
செம்பொன் நெடுங்கடை திறமினோ.

பொருங்கண் வேல்இளைஞர் மார்பின் ஊடுருவு
புண்கள் தீரஇரு கொங்கையின்
கருங்கண் வேதுபட ஒற்றி மென்கைகொடு
கட்டு மாதர்கடை திறமினோ.[1]

[கண்வேல்-கண்ணாகிய வேல் ; வேது-சூடான ஒத்தடம்; வாய்மருந்து-இதழ் அமுது ; கருங்கண்-முலைக்கண் ; கட்டும் தழுவும்]

என்று காட்டுகின்றார். புறப்பொருள் அனுபவத்தை அகப்பொருள் அனுபவத்துடன் பிணைத்துக்காட்டும் கவிஞரின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. மகளிர் ஆடவர்களின் மனத்தை எளிதில் கவரவல்லவர்கள் என்பதை எவரும் அனுபவத்தில் அறியலாம். இவ்வனுபவத்தைக் கவிஞர்,


  1. தாழிசை-55, 56.