பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவைகளின் களஞ்சியம்

105


நாட்டார்போல் நம் நாட்டார் இறுதிவரையில் வளர்த்துக்காட்ட முனைவதில்லை. கலிங்கப்போர் முடிந்தபின் திரும்பிவராத தன் கொழுநனைத்தேடிக் கொண்டு போர்க்களத்துக்கு வருகிறாள் மங்கை ஒருத்தி. அங்கு தன் கணவனின் உடல், முகம் வேறாகவும் கை வேறாகவும் கால் வேறாகவும் துண்டுபட்டுக் கிடக்கின்றது. தலைமட்டும் அவளுக்குக் கிடைக்கிறது; ஏனைய உறுப்புக்களை நரிகள் இழுத்துச் சென்றன போலும் அவள் அவற்றை அடையாளம் காட்டுமாறு பயிரவி என்ற பெண் தெய்வத்தை வினவுகின்றாள்.

பொருதடக்கை வாளெங்கே? மணிமார்பு எங்கே?
போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோள் எங்கே? எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்[1]

[மணி. அழகிய வயிரம்-அழுத்தமானது: பயிரவி-யோகினி]

இன்னொருத்தி தன் கணவன் முகத்தைக்கண்ட பிறகு தன் உயிரைத் துறக்க விரும்புகின்றாள்.போர்க் களத்துக்கு வந்து சாதகரையும் இடாகினியையும் அவ்வுடலைக் காட்டுமாறு வினவுகின்றாள்.

தங்கணவர் உடன் தாமும் போக என்றே
சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவர் கிடந்தஇடம் எங்கே என்றென்று
இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்[2]

[சாதகர்-காளியின் மெய்காப்பாளர்; இடாகினி-சுடலைப் பிணம் தின்னும் பேய்]

என்பது அவள் நிலையைக் காட்டும் சொற்படம்.


  1. தாழிசை-484
  2. தாழிசை-481