பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுவைகளின் களஞ்சியம்

109


கொண்டு தம் அரசனிடம் ஓடி முறையிடும் காட்சியை,

உரையிற் குழறியும் உடலிற் பதறியும்
ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே
அரையிற் றுகில்விழ அடையச் சனபதி
அடியிற் புகவிழு பொழுதத்தே[1]

[துகில்-ஆடை அடைய-எல்லாரும்]

என்று காட்டுகிறார் கவிஞர். இதில் அச்சம் பொதுளுவதைக் கண்டு மகிழ்க. இன்னும் கருணாகரன் போரில் இறங்கிப் பொருதபொழுது அவன் முன் எதிர்த்து நிற்க ஆற்றாது அனந்தபன்மன் வெருவியோடியபொழுது கலிங்கரின் நிலையைக் கவிஞர்,

எதுகொல் இதுஇது? மாயை யொன்றுகொல்?
எரிகொல்? மறலிகொல்? ஊழியின்கடை
அதுகொல்? எனஅல ருவி ழுந்தனர்
அலதி குலதியோ டேழ்க லிங்கரே[2]

[இது-போர்; எரி-தீ; மறலி-யமன்; ஊழி-யுகாந்தம்; அலதி குலதியுடன்- மிக்க நடுக்கத்துடன்]

என்று காட்டுவதிலும் அச்சச் சுவையைக் காண்க.

இவ்வாறு நடுங்கியோடிய வீரர்களில் சிலர் கடலில் பாய்வர் ; சிலர் யானையின் வயிற்றில் புகுந்து மறைவர் ; சிலர் மலைக் குகையிலும் சிலர் புதர்களிலும் ஒளிவர். இன்னும் சிலர் தத்தம் நிழலுக்கே அஞ்சி ஒடுவதற்குப் பயந்து அபயம் என்று அலறுவர். இச்செய்திகளைக் கூறும் தாழிசைகள் யாவும் அச்சச்சுவை பற்றியனவே.[3]


  1. தாழிசை-374,
  2. தாழிசை-450
  3. தாழிசை-451, 452, 453.