பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

துணையாக்கிக் கொண்டு வாழ்ந்த - பெரிய புராணத் தொண்டர் - அப்பூதியடிகள் போலவே, அனைத்தையும் கம்பனுக்கென்றே உரிமையாக்கித் தம் வாழ்வைத் தூய்மையாக்கிக் கொண்டு வாழ்பவர் திரு. கணேசன். கம்பன் காவியத்தைத் துணைக் கொண்டு பாமர மக்கள் மீதும் இலக்கிய வானத்தைக் கவியச் செய்து கொண்டு வருபவர். அவருக்குச் சமர்ப்பணம் செய்வதே பல்லாற்றானும் பொருத்தம் என்து கருதினேன்; அவ்வாறே செய்தும் உள்ளேன்.

எங்கள் ராய. சொ. அவர்கள் இலக்கியச் செல்வர் ; தமிழ் இலக்கியங்களின் எல்லைகளை யெல்லாம் கண்ட மேதை ; வரையாது வழங்கும் வள்ளல். பண்டைக் காலத்தில் அரசர்கள் ஆண்டு தோறும் துலாபாரம் ஏறுவார்களாம். அன்று தன்னைக் காண வருபவர்கட்குப் பொன்னும் வெள்ளியும் மணிகளும் அள்ளி அள்ளி வழங்கப் பெறுமாம். எங்கள் ராய சொ. அவர்கள் சனிக் கிழமை தோறும் இலக்கியத் துலாபாரம் ஏறுவார். அப்பொழுதெல்லாம் எங்கட்கு நல்ல வேட்டை! நாங்கள் பல்வேறு இலக்கியச் செல்வங்களே செவியாரப் பருகுவோம். இந்த இலக்கிய தானம் சுமார் நான்காண்டுகளாகக் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இங்ஙனம் 'இலக்கிய வள்ளலாக' வாழ்பவர்கள் என்மீது காட்டிவரும் அளவற்ற அன்பின் காரணமாக முன்னுரை அருளி எனக்கு ஆசி கூறி என் நூலையும் சிறப்பித்துள்ளார்கள். அப்பெரியாருக்கு என் உளங் கனிந்த நன்றி.