பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


குலோத்துங்கனின் தலைமைச் சேனதிபதியாகவும் மந்திரத் தலைவனாகவும் விளங்கினான். இச்செய்திகள்,

மண்ட லீகரும் மாநில வேந்தரும்
வந்து ணங்கு கடைத்தலை வண்டைமன்
தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர்
சூழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே[1]

இறைமொ ழிந்தளவில் எழுக லிங்கமவை
எறிவ னென்றுகழல் தொழுதனன்
மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல
திலகன் வண்டைநகர் அரசனே[2]

வண்டை வளம்பதி பாடீரே
மல்லையும் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே
பல்லவர் தோன்றலைப் பாடீரே ![3]

என்ற தாழிசைகளால் அறியலாகும் இன்னும் கருணாகரன் பல இடங்களில் வண்டை நகர் அரசன்' என்றும், வண்டையர் அரசன்' என்றும், 'வண்டையர் கோன்’ என்றும் நூலில் குறிக்கப்பெறுகிறான். மத்தியகாலத்துச் சோழப் பேரரசில் பல்லவ வேந்தர்கள் தம் பழைய பெருவலிமை குன்றி சோழர்களின் கீழ் அமைச்சர்களாகவும், பட்டைத் தலைவர்களாகவும், ஏனைய அதிகாரிகளாகவும் வாழ்ந்ததுடன், தொண்டை நாட்டிலும் சோணாட்டிலும் பிறவிடங்களிலும் சிறியவும் பெரியவுமான ஊர்களுக்குத் தலைவர்களாகவும் வாழ்ந்தனர் என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். அவ்வாறு அமர்ந்த பல்லவ வேந்தர்களுள் இக்கருணாகரனும் ஒருவன்.


  1. தாழிசை-327
  2. தாழிசை-841
  3. தாழிசை-534