பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருணாகரத் தொண்டைமான்

127


வெட்டுக்களும் முறையே வேறுபடக் கூறினும், முதலில் வண்டையிலிருந்த கருணாகரனே கலிங்கப் போருக்குப் பிறகு மணவிலைத் தனக்குரிய ஊராக மாற்றியிருக்கக் கூடுமென்றும், ஸூக்திரத்நஹாரப்தில் குலசேகரன் அமைச்சனாக இக்காலிங்கராயனைக் கூறியிருப்பது, அக்குலசேகரப் பெயர் அபயனுக்குரியதென்பது 'வாழி சோழ குலசேகரன்'[1] என்ற பரணித் தொடரால் அறியப்படுதலால் அவ்வபயனே அந் நீதிநூல் கூறும் குலசேகரன் என்றும் திருவனந்தபுரம் கல்வெட்டுத் துறைத் தலைவராக இருந்த திரு. ஏ. எஸ். இராமநாத அய்யரவர்கள் கூறுவர்.[2] இவற்றால் குலசேகரன் மந்திரி காலிங்கராசன், மணவிற் காலிங்கராயனான அருளாகரன், கலிங்கம் வென்ற கருணாகரன் ஆகிய மூவரும் ஒருவரே என்பது திரு அய்யரவர்களின் முடிபாதல் பெறப்படுகின்றது.

இக்கருத்தைத் திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் மறுத்து, ஸூக்திரத்நஹாரம் செய்த காலிங்கராசனும், அபயன் சேனாதிபதிகளுள் ஒருவனை மணவிற் காலிங்கராயனும், அவன் தலைமைச் சேனாதிபதியான வண்டைக் கருணாகரனும் மூவேறு தலைவர்கள் என்றும், அம்மூவரையும் ஒருவராகக் கொள்ளுவதற்குத் தக்க ஆதாரங்கள் இல்லையென்றும் தெளிவாக ஆராய்ந்து முடிவு கட்டியுள்ளார்கள்.[3] கருணாகரனைப்பற்றி அறிய விரும்பும் அன்பர்கள் அப்பகுதியையும் படித்தறிந்து கொள்வார்களாக.


  1. தாழிசை.285
  2. "கருணாகரத் தொண்டைமானும் ஸ்ரீ ஸூக்திரத்நஹாரமும்" என்ற கட்டுரையில்.
  3. ஆராய்ச்சித் தொகுதி-பக், 439-445.