உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



130

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


நரேந்திரன், விசயாதித்தன் என்ற இரு மக்கள் இருந்தனர். விமலாதித்தன் இறந்த பிறகு இராசராச நரேந்திரனே மணிமுடி கவிக்கப் பெற்று நாட்டை ஆளத் தொடங்கினான். அந்தக் காலத்தில் சோழநாட்டை முதலாம் இராசேந்திரன் (கி. பி. 1012-1944) ஆண்டு வந்தான் ; தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழபுரம்[1] என்ற புதியதோர் தலைநகரை ஏற்படுத்தினான். அவன் தன் மகள் அம்மங்கையை தன் உடன்பிறந்தாளது மகனான இராசராச நரேந்திரனுக்குக் கடிமணம் இயற்றினான் மனமக்கள் இருவரும் வேங்கி நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

சில ஆண்டுகள் கழித்த பின்னர் அம்மங்கை தேவி கருவுற்றனள். கருவுயிர்ப்பதற்காக தன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கு ஒர் ஆண் மகனை ஈன்றாள். அந்தப் பிள்ளைதான் பிற்காலத்திய முதலாம் குலோத்துங்கன். பிள்ளை பிறந்த சமயத்தில் பல நன்னிமித்தங்கள் தோன்றின. மக்கள் பெருமகிழ்வுற்றனர். குழந்தையின் பாட்டியார், முதல் இராசேந்திரனின் பட்டத்தரசி, தன் காதற் பேரனைக் கையில் ஏந்திப் பாராட்டிய பொழுது, காலஞ்சென்ற தன் கணவனது அடையாளங்கள் பல அக் குழந்தையின் பால் இருத்தல் கண்டாள். கண்டதும் களிபேரின்பத்துடன்,

இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
பாரிக்கத் தகுவன் என்றே[2]


  1. இது திருச்சி மாவட்டம்-உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது.
  2. தாழிசை-237