பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குலோத்துங்கன்

131


என்று வாழ்த்தினாள் ; அக் குழந்தைக்கு இராசேந்திரன் என்றும் பெயரிட்டாள்.[1] சந்திரகுலத்தைச் சார்ந்த சளுக்கிய அரசர்களும் சூரிய குலத்தைச் சார்ந்த சோழ அரசர்களும் இக் குழந்தையின் பிறப்பால் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தனர். இராசேந்திரன் கல்வி பயின்று பல கலைகளிலும் தேர்ச்சியுற்றான்; படைக்கலப் பயிற்சி போன்ற துறைகளிலும் தேர்ந்து தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தான். முதல் இராசேந்திரனுக்கு இாாசாதி ராசன், விசயராசேந்திரன், வீரராசேந்திரன் என்ற மூன்று மக்கள் இருந்தனர். மூவரும் தம்மருகன் இராசேந்திரனிடத்துப் பெரிதும் அன்பு காட்டினர். இராசேந்திரனின் ஆற்றலையுணர்ந்த சான்றோர்கள் தாயின் குலத்தையும் தந்தையின் குலத்தையும் ஒருங்கே பெருமையுறச் செய்யப் பிறந்தவன் என்று கருதி, இவனை 'உபய குலோத்தமன்' என்று பாராட்டிப் பேசினர்.

இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்த நாளில், வேங்கி நாட்டில் தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோய்வாய்ப்பட்டிருப்பதாக ஒரு திருமுகம் வரப்பெற்றனன். அதைக் கண்டதும் மிகவும் கவன்று தன் அம்மான்மார்களிடம் விடை பெற்றுக் கொண்டு வேங்கி நாட்டிற்கு விரைந்தான். வேங்கி நாட்டையடைந்ததும் பிணியுற்றுக் கிடந்த தன் தந்தையின் நிலைமை அவன் மனமுடையச் செய்தது. அருகில் அமர்ந்து அணுக்கத் தொண்டனாய்த் தந்தையை நன்கு கவனித்து வந்தான். கி. பி. 1062-ல் அவன் தந்தை


  1. S.MI.I. Vol 7 No.765 (செல்லூர்ச் செப்பேடு)