பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


திரன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப் பெறும் உள்நாட்டுக் கலகத்தில் குலோத்துங்கனும் பங்கு கொண்டிருத்தல் கூடும் என்று யூகிக்க இடமுண்டு என்று திரு.சாஸ்திரியார் கருதுகிறார்கள்.[1] திரு.பண்டாரத்தார் அதிராசேந்திரன் காலத்தில் நாடு அமைதியாக இருந்தது என்று கல்வெட்டு ஆதாரத்தால் நிறுவியதும், வீரராசேந்திரனும் குலோத்துங்கனும் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து கொண்டவர்களாதலால், குலோத்துங்கனுக்கு முன்னதாக பரகேசரி என்ற பட்டம் புனைந்த வேந்தன் ஒருவன் இருந்தமையையும் அவன் உரிமையையும் ஒப்புக் கொண்டவன் என்று காட்டியதும் எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணங்களாகும். விக்கிரமாங்கதேவ சரிதமும் விக்கிரம சோழன் உலாவும், அதிராசேந்திரன் ஆட்சியைக் குறிப்பிடுகின்றன. கலிங்கத்துப் பரணி அவன் ஆட்சியைக் குறிப்பிடாததற்கு யாது காரணமாக இருத்தல் கூடும் என்று யூகிக்க முடியவில்லை. அதுகிடக்க.

வீர ராசேந்திரனுக்குப் பிறகு சில திங்கள் வரை அரசாண்ட அதிராசேந்திரன் கி.பி.1070-ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தனன். சோழர் மரபில் அரசகுமாரன் ஒருவனும் இல்லாமையால், குறுநில மன்னரது கலகமும் உள்நாட்டுக் குழப்பமும் எழுந்தன. இவற்றைத்தான் சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் குறிப்பிடுகிறார்.[2] இச்செய்தி குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகளாலும் உறுதிப்படு


  1. ibid p. 294 & 295.
  2. தாழிசை,258, 259, 260, 261