பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.தென்தமிழ் தெய்வப் பரணி


செஞ்சொற் கவியின்பம் பயக்கவல்ல இலக்கியங்கள் எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் எண்ணற்றவை இருக்கின்றன. எப் பெயர்களால் வழங்கினாலும், நம் தமிழ் மொழியில் வழங்கும் ஒன்பது சுவைகள் அவ்விலக்கியங்களில் மலிந்து கிடந்தோ விரவிக் கிடந்தோ அவற்றைச் சிறப்பித்துப் படிப்போரை இன்பக் கடலில் திளைக்கச் செய்கின்றன. காப்பியங்களும், பிரபந்தங்களும், தனிப்பாடல்களும் இச் சுவைகளைக் கொண்டு இலங்குவதை இலக்கியச் சோலைகளில் புகுந்து பார்ப்போர் நன்கு அறிவர். பல்சுவைகள் ததும்பும் பிரபந்தங்களில் கலிங்கத்துப் பரணியும் ஒன்று : சுவைநலங்கனிந்த ஓர் அற்புதச் சிறு பிரபந்தம்: ' பரணிக்கோர் சயங்கொண்டான் ' என்று புலவர்களால் சிறப்பித்துப் பாராட்டப் பெறும் சயங் கொண்டார் என்ற புலவர் பெருமானால் பாடப் பெற்ற நூல்.