பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தென்தமிழ் தெய்வப் பரணி

17


கிறது. கலிங்கப்போர் மேற்சென்ற வீரர் மீண்டு வரக் காலம் தாழ்த்தியதாகவும் அதுகண்ட அவர்களுடைய காதல் மகளிர் ஊடல் கொண்டு கதவடைத்துக் கொண்டதாகவும் கொண்டு, புலவர் தாம் பாடப் போகும் அக்கலிங்கப் போர்ச் சிறப்பைக் கேட்டு மகிழ்தற் பொருட்டு கதவைத் திறக்குமாறு வேண்டுவதாக இப்பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இது பற்றி இரண்டு கருத்துக்கள் உள்ளன. அவற்றைப் பின்னர் விரிவாக ஆராய்வோம்.

அடுத்து பேய்களின் தலைவியாகிய காளிதேவியின் சிறப்பு கூறப் பெறுகின்றது. காளிதேவி வாழும் காட்டின் இயல்பு, அதன் நடுவேயுள்ள அவளுடைய திருக்கோவில் அமைப்பு முறை, அவள் வீற்றிருக்கும் சிறப்பு, அவளைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் தன்மை முதலியவற்றை ஆசிரியர் வருணிப்பது நம்மை வியப்புச் சுவையில் ஆழ்த்துகின்றது. தேவி வீற்றிருக்கும்பொழுது இமயத்திலிருந்து ஒரு முதுபேய் வருகிறது. அது தான் கற்ற இந்திர சாலங்களையெல்லாம் காளிதேவி முன் அரங்கேற்றுகின்றது. இப்பகுதி நகைச்சுவை ததும்பி நிற்கின்றது.

பிறகு குலோத்துங்கன் பிறந்த 'குடிவழி' கூறப் பெறுகின்றது. இது இமயத்திலிருந்து வந்த முதுபேயின் வாயில் வைத்துப் பேசப்பெறுகின்றது. முதுபேய் இமயத்தில் வாழ்ந்த பொழுது கரிகாலன் இமயத்தைச் செண்டால் எறிந்து திரித்து மீண்டும் அது நிலை நிற்குமாறு தன் புலிக் கொடியைப் பொறித்தான். அப்பொழுது அங்கு வந்த நாரதர் திருமாலே குலோத்துங்கனாகப் பிறக்க இருக்கும் சோழர்