பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


நிற்கும் மகளிர், பொது மகளிர் ஆகிய எல்லா வகுப்பைச் சார்ந்தவர்களும் இதில் பங்கு கொள்வதை அறியலாம். நாட்டு அரசன் வெற்றி எல்லோருடைய வெற்றியல்லவா? தக்கயாகப் பரணி, இரணிய வதைப் பரணிகளுள் வரும் கடைதிறப்புக்களில் வானரமகளிர், நீரரமகளிர், மேரு, கயிலைகளில் வாழும் மகளிர் முதலியோர் கடை திறக்குமாறு விளிக்கப்பட்டிருப்பது ஈண்டு கருதத் தக்கது.

வேறு இலக்கியச் சான்றுகள்

இவ்வாறு கொற்றவை பொருட்டுப் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப் பெறும் விழாவில் மகளிர் கூழும் துணங்கையும் கொடுத்து காடு கெழு செல்வியை வழிபடும் வழக்கம் பண்டையது என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம். அவ்விழாவின் பொழுது துணங்கை, குரவை முதலிய கூத்துக்களையும், அம்மானை பந்து ஊசல் முதலிய ஆட்டங்களையும் மேற்கொண்டு தம் அரசனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அவன் வெற்றித் திறன்களைக் கொண்டாடுவர்; வெற்றிக்குரிய அரசனையும் அவனது நாட்டையும் வாழ்த்துவர். பண்டையில் இவ்வழக்கம் உண்டென்பதை குறுந்தொகை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களாலும் அறியலாம். காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள மறக்குடிப் பெண்டிர் நாளங்காடி பூதத்திற்குப் பூவும் பொங்கலும் சொரிந்து குரவையாடி அரசனை வாழ்த்துவதை,

காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து